வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல் காரணமாக தமிழகத்தின் பல துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. இந்த புயல் தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாகி தீவிரமடைந்து வருகிறது. அதன் தாக்கத்தால் கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், தூத்துக்குடியில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், எண்ணூரில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன.
இதேபோல் சென்னை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களிலும் மூன்றாம் எண் கூண்டும், காரைக்கால், நாகப்பட்டினம், பாம்பன் ஆகிய இடங்களில் இரண்டாம் எண் கூண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.முரசு புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது மேலும் வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவு முதல் நவம்பர் 3 ஆம் தேதி அதிகாலை வரையிலான காலத்தில் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் நெல்லூர் மற்றும் நரசாபூர் இடையே கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது.

அப்போது மணிக்கு நூறு முதல் நூற்றுபத்து கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், சில இடங்களில் நூற்று இருபது கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் வட தமிழக கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தலைகீழாக மாறிய வானிலை... எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை... பல்கலைக்கழக தேர்வும் ரத்து...!
புயலின் வெளிப்பகுதி மழை மேகங்கள் தமிழகத்தின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக அருகிலுள்ள துறைமுகங்களுக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடற்கரைகள், கடல் சுவர்கள் மற்றும் ஆபத்தான இடங்களில் இருந்து விலகி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: முரசு புயல் எதிரொலி: பாம்பன், கடலூர் உள்பட 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள் ஏற்றம்!