தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி பல நாட்கள் கடந்தும் ஆட்சி அமைப்பதில் இன்னும் பரபரப்பு நீடித்து வருகிறது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அரசியல் களத்தில் தினமும் புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
சாதாரணமாக தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சி கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும். அதற்காக தங்களது சட்டசபை குழு தலைவரை தேர்வு செய்த தீர்மான கடிதம் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்களின் ஒப்புதல் கடிதங்கள் வழங்கப்படும். தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களும் முக்கிய பங்காற்றும்.
அந்த ஆவணங்களை பரிசீலித்த பிறகே கவர்னர், முதல்வராக தேர்வு செய்யப்பட்ட நபரை ஆட்சி அமைக்க அழைப்பார். சில நேரங்களில் அதிக இடங்கள் பெற்ற கட்சி உடனடியாக அழைக்கப்படலாம்; அல்லது தேவையான பெரும்பான்மையை நிரூபித்த பிறகே வாய்ப்பு வழங்கப்படலாம். இது முழுவதும் கவர்னரின் அரசியல் மற்றும் சட்ட ரீதியான முடிவைப் பொறுத்தது.
இதையும் படிங்க: "விஜய் சொல்லிட்டாரு"..! விஜய்க்கு ஏன் பாதுகாப்பு கொடுக்கல... CTR நிர்மல் குமார் விளக்கம்..!!

ஆட்சி அமைக்க அழைப்பு கிடைத்ததும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டு புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதன் பிறகு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஓட்டெடுப்பு நடத்தப்படும்.
இந்த சூழலில் தவெக ஆட்சியமைப்பது தொடர்பாக இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையில் திமுக - அதிமுக கூட்டணி உருவாகலாம் என்ற தகவல்கள் நேற்று இரவு முதல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முக்கிய கருத்து தெரிவித்துள்ளார்.
“விஜய் ஆட்சி அமைக்கட்டும். ஆறு மாதங்களுக்கு எந்த தொந்தரவும் செய்ய மாட்டோம். தற்போதைய திமுக அரசின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்” என்று ஸ்டாலின் கூறியிருப்பது தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
அடுத்த கட்டமாக கவர்னர் எவ்வாறு முடிவு எடுக்கப் போகிறார், தவெக பெரும்பான்மையை நிரூபிக்குமா என்ற கேள்விகள் தொடர்ந்து நிலவி வருவதால் தமிழக அரசியல் களம் இன்னும் சூடுபிடித்தே உள்ளது.
இதையும் படிங்க: எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம்! இப்பிடி ஏமாத்திட்டீங்களே!? காங்., எம்.எல்.ஏ - எம்.பி-யை வறுத்தெடுத்த திமுக தொண்டர்!