வர உள்ள 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். “உங்க விஜய் நான் வர்றேன்...” என்ற முழக்கத்துடன் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வந்தார். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக கரூரில் நடந்த நிகழ்வு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்டு நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் ஆணையம் அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் உருவாக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியுள்ளது. கரூர் சம்பவத்திற்கான பின்னணி குறித்த விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் தனது மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தினந்தோறும் தனது மாவட்ட செயலாளர்களை போனில் தொடர்புகொண்டு பேசி வருவதாக கூறப்படுகிறது. வாட்ஸ் அப் கால் மூலமாக கட்சி நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்து வருகிறாராம். தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளிடம் விஜய்யே நேரடியாக பேசி வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கட்சி தொண்டன் இப்படித் தான் செருப்பு வீசுவானா? - ஆவேசமான பிரேமலதா விஜயகாந்த்...!
கட்சி நிர்வாகிகளிடம் பேசும் போது விஜய், தன்னால் கரூர் சம்பவத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை என்றும், அதன் தாக்கம் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கரூர் மக்களை சந்தித்த பிறகே கட்சி தொடர்பான அடுத்தக்கட்ட பணிகளில் பங்கேற்பேன் என்றும் விஜய் நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் இனி வரும் காலங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் எந்த நிகழ்ச்சியையும் தமிழக வெற்றிக் கழகத்தினர் நடத்தக்கூடாது என்றும், கட்சி சார்பில் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தும் போதும் சரியான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் நேரடியாக ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்டுள்ளாராம்.
மேலும் கரூர் சம்பவம் தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும், அமைதியாக கடந்து செல்லும் படியும், அந்த நிகழ்விலிருந்து வெளியே வர முயற்சி செய்யுங்கள் என்றும் சமாதானம் கூறியுள்ள விஜய், விரைவில் இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: விஜயை கைது செய்தால்... டிடிவி தினகரன் பரபரப்பு பிரஸ் மீட்...!