தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், வரும் ஆகஸ்ட் 25ம் தேதி அன்று மதுரையில் கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நாள், மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் பிறந்தநாள் மற்றும் விஜய்யின் திருமண நாள் என்பதால், இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மதுரையில் முதல் மாநாட்டை நடத்திய விஜயகாந்தின் அரசியல் பயணத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கியபோது முதல் மாநாட்டை மதுரையில் நடத்தி இருந்தார். இந்த மாநாட்டில் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் (தேமுதிக) என்ற தனது கட்சியின் பெயரை விஜயகாந்த் அறிவித்திருந்தார். 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5 லட்சர் சேர் போடப்பட்டு நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் உட்கார கூட இடம் இல்லாமல், வெளியே லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.

தமிழக வெற்றிக் கழகம், நடிகர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. 2024ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட இக்கட்சி, இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகநீதி ஆதரவாளர்களை மையப்படுத்தி தனது அரசியல் பயணத்தை வலுப்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: ஆர்ப்பாட்டத்தில் சேதமான தடுப்புகள்.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. தவெக எடுத்த அதிரடி முடிவு..!
தவெகவின் முதல் மாநில மாநாடு கடந்த 2024ம் ஆண்டு அக்டோபரில் விக்ரவாண்டியில் நடைபெற்றபோது, கல்வி, மாநில உரிமைகள், ஊழல் ஒழிப்பு மற்றும் மதச்சார்பின்மையை முன்னிறுத்திய கொள்கைகளை விஜய் அறிவித்தார். வரும் ஆகஸ்ட் 25ம் தேதி அன்று மதுரையில் நடைபெறவுள்ள இரண்டாவது மாநில மாநாடு, தவெகவின் தேர்தல் வியூகங்களை மேலும் தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் கூட்டணி முடிவுகள், தொகுதி வாரியான திட்டங்கள் மற்றும் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்.

தவெக, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு மாவட்ட அளவில் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. மதுரை மாநாடு, விஜய்யின் அரசியல் செல்வாக்கை மேலும் வலுப்படுத்துவதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இளைஞர்கள் மற்றும் பெண்களை மையப்படுத்தி, கல்வி, சமூகநீதி மற்றும் மாநில உரிமைகளை முன்னிறுத்தி தவெக தனது பயணத்தை தொடர்கிறது. விஜயகாந்தின் அரசியல் மரபை மதிக்கும் வகையில், இந்த மாநாடு தமிழக அரசியலில் புதிய அலையை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மதுரையில் நடைபெற்ற தேமுதிகவின் முதல் மாநாடு உலக சாதனையாக கூறப்பட்டுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்யின் இந்த 2வது மாநாடு அந்த சாதனையை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..!!
இதையும் படிங்க: தவெக கொடி கலர் படகுகளுக்கு மானியம் இல்லையா..? மீன்வளத்துறை அதிகாரிகள் விளக்கம்..!