சென்னை: தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் வேகமாக மாறி வரும் நிலையில், த.வெ.க. கூட்டணி தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. த.வெ.க. அமைச்சரவையிலும், கூட்டணியிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெறவில்லை என்றும், எதிர்காலத்திலும் இடம்பெற மாட்டோம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
த.வெ.க. சார்பில் வரும் 9-ம் தேதி சென்னையில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பை த.வெ.க. அமைச்சர்கள் நேரில் சென்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் வழங்கியுள்ளனர்.
இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு குழு அமைப்பது, குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் வேட்பாளர் விவகாரமும் கூட்டணி கட்சிகளிடையே பேசப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: கூழுக்கும் ஆசை... மீசைக்கும் ஆசையா.? டாஸ்மாக்கை விட்டொழி..! கிருஷ்ணசாமி தாக்கு.!!
ஆனால், இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்பது குறித்து கட்சி முடிவு செய்யும் என வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். த.வெ.க. கூட்டணியின் முதல் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்தியில் பா.ஜ., ஆட்சி தொடரக் கூடாது என்பதற்காக ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், பா.ஜ.,வை வீழ்த்துவது ‘இண்டி’ கூட்டணியின் கடமை என்றும் வீரபாண்டியன் கூறியுள்ளார். இதனால், த.வெ.க.வை விட ‘இண்டி’ கூட்டணியை வலுப்படுத்துவதிலேயே தங்கள் கவனம் இருக்கும் என்ற நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதற்கிடையே, த.வெ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க. வரும் 9-ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். த.வெ.க. அமைச்சர்கள் வைகோவை நேரில் சந்தித்து கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
த.வெ.க. கூட்டணியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தனித்துவமான நிலைப்பாடு தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!