தமிழகத்தின் 17வது சட்டசபை இன்று பரபரப்பான அரசியல் காட்சிகளுக்கு சாட்சியாக அமைந்தது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் மேலும் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இதையடுத்து இன்று காலை சட்டசபை கூட்டம் துவங்கியபோது, முதலமைச்சர் விஜய் கோட்-சூட் அணிந்து அவைக்கு வந்தார். அவர் முதல் வரிசை இருக்கையில் அமர்ந்தார். அவருக்கு அருகில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். முதலமைச்சருக்கு நேரெதிராக திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமர்ந்தது அரசியல் கவனத்தை ஈர்த்தது.
அவையில் அதிகம் பேசப்பட்ட தருணமாக விஜய் மற்றும் உதயநிதி இடையேயான குளிர்ந்த அணுகுமுறை மாறியது. முதலமைச்சர் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்க வந்தபோது உதயநிதி முகத்தை திருப்பிக்கொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல் உதயநிதி பதவியேற்க எழுந்தபோது விஜயும் எந்த எதிர்வினையும் காட்டாமல் இருந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவிக்காத சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: ஆண்டவன் மீது ஆணையாக..! விஜயை பார்த்து உறுதிமொழி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்..!

தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்ற கருப்பையா, நிரந்தர சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பிறகே உறுப்பினர்களுக்கான நிரந்தர இருக்கை ஒதுக்கீடு முடிவு செய்யப்படும் என அறிவித்தார். தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உறுதிமொழி ஏற்று எம்எல்ஏவாக பதவியேற்றார். பின்னர் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றனர். உதயநிதி, பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்களும் அடுத்தடுத்து பதவியேற்றனர்.
நாளை நிரந்தர சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் என அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: பெரம்பூர் தொகுதியின் MLA- வாக முதல்வர் விஜய் பதவியேற்பு..! சட்டப்பேரவையில் உறுதிமொழி..!