புதுச்சேரி: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் முதல் பெரிய பொதுக்கூட்டத்தை முன்னிட்டு புதுச்சேரி உப்பளம் துறைமுக திடல் இன்று (டிசம்பர் 9) காலை முதலே பெரும் பரபரப்பாக காட்சியளித்தது.
கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சோகத்துக்குப் பிறகு நடக்கும் முதல் பெரிய நிகழ்ச்சி என்பதால், புதுச்சேரி காவல்துறை கடும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. 5,000 பேர் மட்டுமே அனுமதி, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளே வரக்கூடாது, க்யூஆர் கோட் பாஸ் உள்ளவர்கள் மட்டுமே என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் போடப்பட்டன.
ஆனால் காலை 9 மணியிலிருந்தே ஆயிரக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் மைதான வாயிலில் திரண்டனர். க்யூஆர் கோடு இல்லாத ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் “தளபதி… தளபதி…” என்று கோஷமிட்டபடி பாரிகேட்களை உடைத்து உள்ளே புக முயன்றனர். போலீசார் ஒவ்வொருவராக சோதனை செய்து அனுப்ப முயன்றபோது, பொறுமையிழந்த ரசிகர்கள் கும்பலாக முண்டியடித்து கதவைத் தள்ளினர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் விஜயின் மக்கள் சந்திப்பு!! அனுமதி பெறுவதில் இழுபறி!! முதல்வரை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்!
இதனால் போலீசுக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார், லேசான தடியடி நடத்தி ரசிகர்களை விரட்டினர். சிலர் தரையில் விழுந்து காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் காட்சிகளைப் பார்த்த தவெக பொதுச்செயலாளர் புஷ் ஆனந்த் மைக்கைப் பிடித்து, “யாரும் போலீசுக்கு சிரமம் கொடுக்காதீர்கள். பாஸ் உள்ளவர்கள் முதலில் வாருங்கள். தளபதி விஜய் பெயருக்கு களங்கம் வரக்கூடாது. அமைதியாக ஒத்துழைப்பு கொடுங்கள்” என்று தொடர்ந்து கெஞ்சினார். அப்போதும் கூட்டம் அடங்கவில்லை. வாயில் கதவுகளை போலீசார் மூடியதும், வெளியே நின்ற ரசிகர்கள் “விஜய்… தவெக…” என்று முழக்கமிட்டு பெரும் ஆரவாரம் செய்தனர்.

இந்த விதிமீறல் குறித்து புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கடும் அதிருப்தி தெரிவித்தார். “அனுமதி 5,000 பேர் என்று தெளிவாகச் சொல்லியும் அதை மீறி பல்லாயிரக்கணக்கானவர்களை தவெக நிர்வாகிகள் திரட்டியிருக்கிறார்கள். இது தெளிவான விதிமீறல். இதுகுறித்து தவெக நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்போம்” என்று அமைச்சர் காட்டமாக பேசினார்.
இருப்பினும், காலை நிகழ்ச்சி தொடங்கியதும் விஜய் மேடைக்கு வந்ததும் மைதானம் முழுவதும் “தளபதி… தளபதி…” கோஷத்தால் அதிர்ந்தது. கரூர் சோகத்துக்குப் பிறகு விஜய் பேசும் முதல் பெரிய பொதுக்கூட்டம் என்பதால், புதுச்சேரி முழுவதும் இளைஞர்கள், ரசிகர்கள் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், காலை நடந்த குழப்பமும் தடியடியும் சமூக வலைதளங்களில் வைரலாகி, தவெக மீது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் கடும் கட்டுப்பாடுகளையும் மீறி ரசிகர்களின் உற்சாகம் தெரியும் அதே நேரம், அனுமதியை மதிக்காமல் நடந்து கொண்டதற்கு தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை வரலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 2026ல் விஜய் தான் முதலமைச்சர்... புதுவையில் புஸ்ஸி ஆனந்த் உறுதி..!