புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி துணைநிலை ஆளுனர் கைலாஷ்நாதன் இடையே மோதல் முற்றி இருப்பது புதவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரத்தை என்.ஆர் காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. புதுச்சேரி அரசு நிர்வாகத்தின் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனின் தலையீட்டால் முதல்வர் ரங்கசாமி கடந்த சில மாதங்களாகவே அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. சுகாதாரத்ததுறை இயக்குனர் நியமனத்தில் முதல்வரின் பரிந்துரையை துணைநிலை ஆளுநர் ஏற்காததால் வெளிப்படையாக முதல்வர் ரங்கசாமி கோபத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
முதல்வர் ரங்கசாமியை சமாதானப்படுத்த பாஜக தரப்பில் முயன்று வரும் நிலையில் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் விடுதியில் சந்தித்து ரங்கசாமி ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது முதலமைச்சராக பொறுப்பில் இருந்தும் துணைநிலை ஆளுநரின் தலையீட்டால் அதிகாரம் இல்லாமல் இருப்பது குறித்து ஆதங்கத்தை முதல்வர் ரங்கசாமி வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து என்ஆர் காங்கிரஸ் அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோறுவது தொடர்பாக சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வலியுறுத்தினர். புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரி தலைமை செயலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சுயேட்சை எம்எல்ஏ நேரு பின்னர் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தையும் வழங்கினார். என்னுடைய கோரிக்கைக்கு மரியாதை இல்லை அப்புறம் எதுக்கு நம்மளுக்கு ஒரு சட்டமன்றம் இருக்குது. அவங்களுக்கு உண்டான அதிகாரம் இல்லாத நிலையில், இன்னைக்கு சட்டமன்றம் ரெண்டு நாட்களாக முடங்கி கிடக்கிறது. ஆகையால இனிமேலாவது இந்த அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: வெயிலுக்கு லீவு.. விளாசப்போகும் மழை.. எந்த ஊர்ல தெரியுமா?
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது தொடர்பான சிறப்பு கூட்டத்தொடருக்கு முதல்வருடன் ஆலோசித்த பின் முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்தார். மேலும் அரசு விழாக்களில் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்பதை சுட்டிக்காட்டிய சபாநாயகர் செல்வம், புதுச்சேரி அரசு முடங்கிப்போய் விடவில்லை என்றார். இதனிடையே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி எடுக்கும் முடிவு எதுவாக இருப்பினும் அதற்கு துணை நிற்போம் என என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உறுதி அளித்துள்ளதாக தகவல்.
இதையும் படிங்க: பெரியாரையே இழிவுபடுத்திய திமுக எங்களுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை... அதிமுக கடும் சாடல்..!