திருப்பத்தூர் பள்ளி மாணவரின் மர்ம மரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில், லண்டன் மிஷன் ரோடு பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வந்த, 11-ஆம் வகுப்பு மாணவன் முகிலன், அதே பள்ளியில் இயங்கும் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
கொத்தூர் பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி என்பவரின் மகனான முகிலனின் மர்மமான மரணம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் என் மகன்.. அன்புமணியை கடுமையாக சாடிய ராமதாஸ்..!!
 மாணவன் முகிலனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 மாணவன் முகிலன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி வழக்கை முடிக்க முயற்சிகள் நடப்பது கண்டிக்கத்தக்கவை என்றும் மாணவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட கிணற்றின் முகப்பு இரும்புக் கம்பி வலையால் மூடப்பட்டிருக்கிறது. அதைத் தாண்டி கிணற்றுக்குள் குதிப்பதோ, தவறி விழுவதோ சாத்தியமில்லை. அவ்வாறு இருக்கும் போது மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது யாரையோ காப்பாற்றும் எண்ணம் கொண்டு இருப்பது உறுதியாகி இருப்பதாக தெரிவித்தார்.
அண்மைக்காலங்களாகவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது அதிகரித்து வருவதாகவும்,  அரசு பள்ளிகளில் இப்படியாக மர்ம மரணங்கள் தொடர்வது தடுக்கப்பட வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தினார்.
மேலும், மாணவர்களின் மர்ம மரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் என்றும் அத்துடன் மாணவர் முகிலனின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: ”நான் மட்டும் முதல்வரானால் கூவம் தண்ணீரைக் குடிக்கலாம்” - மக்களுக்கு ஷாக் கொடுத்த அன்புமணி ராமதாஸ்...!