கோவை சிங்காநல்லூர் பகுதியில் அடகு கடையின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து சுமார் 100 சவரன் தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி திருடப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் வசந்தாமில் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் கோவை திருச்சி சாலை சிங்காநல்லூர் பகுதியில் மகாதேவ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சிவராத்திரியை முன்னிட்டு கடைக்கு விடுமுறை அளித்த அவர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இதனிடையே நேற்றிரவு சுமார் 11 மணியளவில் கடையின் பின்புறமுள்ள ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 100 சவரன் தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்து தப்பியோடினர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல்... எகிறும் எதிர்பார்ப்புகள்... வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன?
முன்னதாக கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு சென்ற ரமேஷ்குமார் ஷட்டர் உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக சிங்காநல்லூர் காவல்நிலைய போலீசாருக்கு தகவலளித்தார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மோப்பநாய் மற்றும் தடயவியல் சோதனை நிபுணர்களுடன் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை சேகரித்து அதன் அடிப்படையில் தப்பியோடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING அதிகாலையிலேயே அதிர்ச்சி... நடுக்கடலில் 25 மீனவர்கள் சுற்றி வளைத்து கைது... இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்...!