காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு எந்தவிதமான கட்டுமானங்களை மேற்கொள்வதற்கும் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பிற பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி மற்றும் அதற்குப் பிற மாநிலங்களின் ஒப்புதல் அவசியமா என்பது குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையும் படிங்க: "விஜய் கர்நாடகா செல்கிறாரா?" - உறுதியான தகவல் இல்லை... பிரவீன் சக்கரவர்த்தி பரபரப்பு பேட்டி!

அவரது கேள்விக்கு மத்திய ஜல் சக்தி (நீர்வளத் துறை) இணை அமைச்சர் ராஜ் பூஷண் சௌதரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், காவிரி விவகாரத்தில் 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின் விவரங்களைச் சுட்டிக்காட்டினார். அதில், காவிரி நதியின் குறுக்கே புதிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு முன்பாக கர்நாடக அரசு, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முன்அனுமதியையோ அல்லது ஒப்புதலையோ பெற வேண்டும் என்று 2018 உச்சநீதிமன்றத் தீர்ப்பில் எந்தவொரு இடத்திலும் கூறப்படவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் சூழலில், தமிழகத்தின் உரிமை சார்ந்த இந்தக் கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள இந்த எழுத்துப்பூர்வ பதில், தமிழக அரசியல் வட்டாரங்களிலும் விவசாயிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கர்நாடக முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்! காவிரியில் பங்கு நீரை பெற தவெக அரசுக்கு வலியுறுத்தல்!