காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட வரலாறு காணாத பெருவெள்ளம் அந்நாட்டின் பல பகுதிகளை முற்றிலும் சீர்குலைத்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர ரூ.45,400 கோடி நிதி தேவைப்படும் என நேபாள அரசு தெரிவித்துள்ளது.
பெருவெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட ஏராளமான கட்டடங்கள் வெள்ளத்தில் சிக்கி கடுமையாக சேதமடைந்துள்ளன.
குறிப்பாக ரசுவா மாவட்டம் வெள்ளத்தின் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. பல பகுதிகளில் வீடுகள் மட்டுமின்றி சாலைகள், பாலங்கள் மற்றும் மின்சார கட்டமைப்புகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நேபாள பேரிடர்: மாயமான 85 தமிழர்களில் 78 பேரின் டிஎன்ஏ நேபாள அரசிடம் ஒப்படைப்பு! நம்பிக்கையுடன் காத்திருக்கும் குடும்பங்கள்!
இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக நேபாள அரசு விரிவான கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. அதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை மீண்டும் உருவாக்குவதற்கு மிகப்பெரிய நிதி தேவைப்படுவது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நேபாள வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு வரலாறு காணாத அளவுக்கு உயிர் மற்றும் பொருள் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலைகள், பாலங்கள், மின் கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றை மீண்டும் அமைக்க நீண்ட காலம் தேவைப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 7,500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளும் சேதமடைந்துள்ளதால், அவற்றை புனரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மின் கம்பங்கள், குடிநீர் குழாய்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் பிற அடிப்படை கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்க வேண்டியிருப்பதால், மறுசீரமைப்பு பணிகளுக்கான செலவு தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இந்த பணிகளை மேற்கொள்வதற்கு மொத்தம் ரூ.45,400 கோடி நிதி தேவைப்படும் என நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பேரிடருக்குப் பிறகு உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போனவர்களை தேடும் பணியுடன், நாட்டின் சேதமடைந்த கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்குவதும் நேபாள அரசுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய 600 குழந்தைகள்! பள்ளி சென்ற மாணவர்கள் மாயமான விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!