கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், கோவை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக முக்கிய நகரங்களுக்கான விமான டிக்கெட் கட்டணங்களும் கணிசமாக உயர்ந்துள்ளன.
சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால், கோவையில் வசிக்கும் பலர் சொந்த ஊர்களுக்கும், பிற நகரங்களுக்கும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதனால் ரயில் மற்றும் சாலை போக்குவரத்துடன் விமான பயணத்திற்கும் தேவை அதிகரித்துள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு தினசரி விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. மேலும், ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: சென்னைக்கு மாற்றாக 2வது தலைநகரம்? தமிழகத்தில் மீண்டும் எழும் முக்கிய கோரிக்கை!
இந்த நிலையில், கோவை–சென்னை வழித்தடத்தில் விமான கட்டணம் பெருமளவில் உயர்ந்துள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான நாட்களில் சுமார் ரூ.6,300 முதல் ரூ.6,500 வரை தொடங்கும் கட்டணம், விடுமுறை காலத்தில் குறிப்பிட்ட சில நேரங்களில் இயக்கப்படும் விமானங்களில் ரூ.16,661 வரை உயர்ந்துள்ளது.

இதனால் வழக்கமாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் மட்டுமின்றி, விடுமுறையை பயன்படுத்தி சொந்த ஊர் செல்ல திட்டமிட்டவர்களும் கூடுதல் செலவை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் கோவை–டெல்லி விமான வழித்தடத்திலும் கட்டணம் உயர்ந்துள்ளது. வழக்கமாக சுமார் ரூ.8 ஆயிரம் முதல் கிடைக்கும் டிக்கெட், விடுமுறை நாட்களில் குறிப்பிட்ட விமானங்களில் அதிகபட்சமாக ரூ.14,956 வரை சென்றுள்ளது.
அதே நேரத்தில் கோவை–மும்பை மற்றும் கோவை–பெங்களூரு வழித்தடங்களில் கட்டண உயர்வு பெரிய அளவில் இல்லை என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விமான டிக்கெட் கட்டணம் என்பது பயணிகள் முன்பதிவு செய்யும் நேரம், இருக்கைகள் கிடைக்கும் அளவு மற்றும் பயண தேவை உள்ளிட்ட காரணிகளுக்கு ஏற்ப மாறுபடும். தற்போது தொடர் விடுமுறையால் பயணிகளின் தேவை அதிகரித்திருப்பதே கோவை–சென்னை உள்ளிட்ட சில வழித்தடங்களில் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதனால், அடுத்த சில நாட்களில் விமானத்தில் பயணம் செய்ய திட்டமிடுபவர்கள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்வது கூடுதல் செலவை ஓரளவு தவிர்க்க உதவும் என பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!