பாலகாட் (ம.பி.): நாடே தீவிரமாகத் தேடி வந்த ரூ.77 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட மிக முக்கிய நக்சல் தலைவன் சுரேந்தர் (கபீர்) உட்பட 10 பேர், மத்திய பிரதேச மாநிலம் பாலகாட்டில் இன்று (டிசம்பர் 7) ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில் நடந்த இந்த சரண் அடைவு நிகழ்ச்சி, நக்சலை ஒழிக்கும் மத்திய அரசின் “2026 இலக்கு”க்கு பெரிய உந்துதலாக அமைந்துள்ளது.
சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேச எல்லைப் பகுதியில் செயல்பட்டு வந்த சுரேந்தர், மாவோயிஸ்ட் அமைப்பின் மிக முக்கிய தளபதியாக இருந்தார். அவரது தலைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ரூ.77 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தது.
இவருடன் அவரது நெருங்கிய கூட்டாளி ராகேஷ் ஹோடி உட்பட 4 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் சரணடைந்தனர். சரணடைந்தவர்கள் ஏராளமான ஆயுதங்களையும் ஒப்படைத்தனர் – ஏகே-47 துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள், டெட்டனேட்டர்கள் என பட்டியல் நீண்டது.
இதையும் படிங்க: மார்ச் 2026க்குள் 'நக்சல் முடிவு' நிச்சயம்! மோடி-ஷா இலக்கு! ரூ.89 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட்டுகள் 11 பேர் சரண்!

இந்த சரண் அடைவு நிகழ்ச்சி, பாலகாட் ஐஜி அலுவலக பங்களாவில் நடைபெற்றது. சரணடைந்தவர்களை முதல்வர் மோகன் யாதவ் நேரில் வரவேற்று, மறுவாழ்வு திட்டத்தின் கீழ் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதனால் மாண்ட்லா மாவட்டம் இப்போது “நக்சல் இல்லா மாவட்டம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே பாலகாட்டில் ஒரு பெண் நக்சலும் சரணடைந்திருந்தார்.
மத்திய அரசின் “நக்சலை 2026-க்குள் முற்றிலும் ஒழிப்போம்” என்ற இலக்குக்கு இது பெரிய வெற்றி. கடந்த சில மாதங்களாகவே நக்சல்கள் பலர் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்து வருகின்றனர். பாதுகாப்பு படைகளின் தீவிர நடவடிக்கையும், மறுவாழ்வு திட்டங்களும் இதற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சுரேந்தரின் சரண் அடைவு, நக்சலை ஒழிக்கும் பணியில் மிக முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்பு வரலாற்றில் இது ஒரு பெரிய மைல்கல் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: குமரி கண்டம் ஆய்வு விவகாரம்... அரசு ஆர்வம் காட்டவில்லை... நீதிபதிகள் அதிருப்தி..!