ஜல் ஜீவன் மிஷன் (ஜே.ஜே.எம்), இந்தியாவின் கிராமப்புற வீடுகளுக்கு பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை குழாய் இணைப்பு மூலம் வழங்குவதற்காக கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். இதன்படி பிரத்யேக குழாய் இணைப்பு மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தத் திட்டம், தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தை (NRDWP) மறுசீரமைத்து, 'ஹர் கர் ஜல்' (ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர்) என்ற இலக்கை அடைய வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதன்மை நோக்கமே, 2024-க்குள் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் தினசரி 55 லிட்டர் குடிநீர் வழங்குவதாகும். ஆனால் இலக்கு தாமதமானதால், இது 2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக ரூ.67,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, தெலுங்கானா, குஜராத், பஞ்சாப் உள்பட 11 மாநிலங்கள் ஜல் ஜீவன் திட்டத்தில் 100 சதவீத இலக்கை எட்டிவிட்டன.
இதையும் படிங்க: #BREAKING: திமுகவில் இணைந்த EX. எம்பி அன்வர் ராஜா... முதல்வர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்...
தமிழ்நாட்டில், 1 கோடியே 25 லட்சத்து 26 ஆயிரத்து 665 கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது இலக்காக உள்ளது. இதில் தற்போது வரை 89.10%, அதாவது 1 கோடியே 11 லட்சத்து 61 ஆயிரத்து 65 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 19 கோடியே 36 லட்சத்து 45 ஆயிரத்து 942 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் 15 கோடியே 67 லட்சத்து 32 ஆயிரத்து 86 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது 80.94 சதவீதம் ஆகும்.

இத்திட்டம் நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மறுசுழற்சி ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. உள்ளூர் பஞ்சாயத்துகள் மற்றும் சமூகங்களின் பங்கேற்புடன், நீர் விநியோக அமைப்புகளின் திட்டமிடல் மற்றும் பராமரிப்பு உறுதி செய்யப்படுகிறது.
இத்திட்டம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நேரத்தை மிச்சப்படுத்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. இருப்பினும், சில இடங்களில், கட்டண வசூல் முறைகேடுகள் குறித்த புகார்களும் எழுந்துள்ளன. மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியால், ஜல் ஜீவன் திட்டம் கிராமப்புற இந்தியாவில் நீர் பாதுகாப்பை உறுதி செய்யும் மக்கள் இயக்கமாக மாறி வருகிறது.
இதையும் படிங்க: இமாலய மதுபான ஊழல்...மாதம்தோறும் 60 கோடி ஜெகன்மோகன் ரெட்டி லஞ்சம் பெற்றதாக புகார்!