ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தொட்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நெசவாளர் கூலி தொழிலாளி தேவராஜ். இவருக்கு பார்வதி என்ற மனைவி, மகள் தக்சன்யா மற்றும் மகன் விஜய் ஆகியோரோடு வாடகை ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் தனது வீட்டிலேயே உள்ள தறியில் கூலிக்கு நெசவு செய்து கொடுத்து வருகிறார். இவருக்கு உதவியாக தனது மனைவி நெசவு செய்து வருகின்றார். இவரது மூத்த மகள் தக்சன்யா தொட்டம்பாளையத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த நிலையில், பத்தாம் வகுப்பு பெருந்துறையில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் பயின்று வந்தார்.
அமெரிக்க வெளியுறவு துறை நிதியுதவி வழங்கும் The Kennedy-Lugar Youth Exchange and Study (YES) எனும் திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் தேர்வான 30 மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டி தேர்வுகள் நடைபெற்றது.
இதையும் படிங்க: கடனில் மூழ்கப்போகும் அமெரிக்கா... அப்பாவி மக்களின் அடிமடியில் கைவைக்க திட்டமிடும் டிரம்ப்...!
இதில் இறுதியாக தேர்வான மூன்று மாணவிகளில் இருவர் தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்களாவர். அரசு மாதிரி பள்ளியில் படித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மாணவி சத்தியமங்கலம் தக்சன்யா தற்போது அமெரிக்க சென்றுள்ளார்.
பண்பாடு மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கான இத்திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் ஓராண்டு பள்ளி படிப்பை மாணவி தக்சன்யா மேற்கொள்ள உள்ளார். பதினோராம் வகுப்பை பெல்டனில் உள்ள ஹார்ட்லேண்ட் பள்ளியில், தற்போது படிப்பை துவங்கியுள்ளார்.
ஓராண்டுக்கு பிறகு மீண்டும் 12ஆம் வகுப்பை தமிழ்நாட்டில் தொடர்வார் என்பதை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழ தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளியில் படித்து அமெரிக்கா சென்றுள்ள மாணவி தக்சன்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இது குறித்து அவரது பெற்றோர் அளித்த பேட்டியில், சத்தியமங்கலம் அருகே உள்ள குக்கிராமமான தொட்டம்பாளையத்தில் ஒரு வாடகை ஓட்டு வீட்டில் வசித்து வருகிறோம்.
நெசவு கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு எந்த விதமான கல்வி பின்புலமோ, அல்லது பொருளாதார வசதியோ எதுவும் கிடையாது. இந்நிலையில் எனது மகளுக்கு தமிழக அரசு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கி இருப்பது முதல் தலைமுறை கல்வி பயிலும் எங்களைப் போன்ற ஏழைகளுக்கு வரப் பிரசாதமாக அளித்துள்ளனர். தமிழக அரசுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறினார். இது குறித்து அவரது தாயார் பார்வதி கூறுகையில், அன்றாட கூலி வேலை செய்தால் மட்டுமே எங்களுக்கு குடும்ப வருமானம் உள்ளது. அமெரிக்கா என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாத எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அவர் 12 ஆம் வகுப்பு படிக்க மீண்டும் சத்தியமங்கலம் வந்த பிறகு, அரசு எங்களது குழந்தைகளின் மேல் படிப்புக்கு உதவ வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: “ஒன்றல்ல... இரண்டல்ல... 1,275 முறை...” - 16 வயது சிறுவனை தற்கொலைக்குத் தூண்டிய சாட்ஜிபிடி... பகீர் சம்பவம்...!