தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதுக்குறுத்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. இது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வலுவடையக்கூடும்.

அதன்படி, வடக்கு திசையில் நகர்ந்து சென்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது தொடர்ந்து, கிழக்கு திசை நோக்கி நகர்வதாகவும், இன்றே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் ரத்தினகிரிக்கும், டபோலிக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற அளவிலேயே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை.. கோவை, நீலகிரிக்கு விரைந்தது பேரிடர் மீட்புப் படை!!

இதற்கிடையே, கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சில பகுதிகளுக்கு இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் நாளையும், நாளை மறு நாளும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையை கடக்க இருக்கக் கூடிய நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர் காட்டுப்பள்ளி, கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 7 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்... அடிச்சு ஊத்த போகும் மழை... 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!