சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசலும் காணப்படும் சாலைகளில் ஒன்றாக ஒ.எம்.ஆர் சாலை விளங்குகிறது. இதில், திருவான்மியூர், தரமணி, மத்திய கைலாஷ் மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சந்திப்பாக டைடல் பார்க் இருந்து வருகிறது. மத்திய கைலாஷிலிருந்து தரமணி செல்லும் முக்கிய சாலையில் டைடல் பார்க் அமைந்துள்ளது. ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் இந்த இடத்தில் உள்ள சிக்னல் பகுதியில், போக்குவரத்து நெரிசல் இருப்பது வழக்கம்.

இதனை குறைக்கும் வகையில் டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை திருவான்மியூர் பகுதியில் சாலையில் திடீரென உருவான பள்ளத்தில் கார் ஒன்று விழுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையும் படிங்க: கல்வி தான் வாழ்க்கையை மாற்றும் சக்தி.. சூதானமா நடந்துக்கோங்க பசங்களா..! உதயநிதி சொன்ன அறிவுரை..!

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் தரமணி காவல்துறையினர் ஜேசிபி உதவியுடன் பள்ளத்தில் கவிழ்ந்த காரை மீட்டுள்ளனர். அப்போது காரில் பயணம் செய்த நான்கு பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் 5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரெயில் பணியால் இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில்தான் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருவதாகவும் அதனால், இந்த விபத்திற்கும், மெட்ரோ ரெயில் பணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பள்ளம் ஏற்பட்ட இடத்திற்கு அருகே கழிவுநீர் கால்வாய் அமைப்புதான் உள்ளது என்றும் ரெயில் சுரங்க பணிகளுக்கும் இந்த விபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வெளியானது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்... 4வது இடத்தில் தமிழகத்தின் சென்னை!!