தமிழகத்தில் தினசரி சுமார் 3 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகும் நிலையில், அதில் 36 லட்சம் லி ட்டர் பாலுக்கான சந்தையை மட்டுமே ஆவின் கொண்டிருந்தது.
அதற்கான பால் கொள்முதல் படிப்படியாகக் குறைந்து, தற்போது 27 லட்சம் லிட்டர் வரையிலேயே ஆவின் கொள்முதல் செய்வதாகத் தெரிகிறது.
விநியோகத் தேவை 36 லட்சம் லிட்டராக இருந்தாலும், தினசரி 31 லட்சம் லிட்டர் வரை மட்டுமே ஆவின் பால் விநியோகம் செய்வதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சொந்த வீடு கனவு நனவாகும் நேரம்! தமிழகத்தில் 25 ஆயிரம் பேருக்கு அடிக்கப் போகும் யோகம்! ரூ.2.50 லட்சம் மானியம்!
சென்னையில் தினசரி 16 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆறு மாதங்களில் பால் விற்பனை 25 சதவீதம் குறைந்துள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மேலும் 10 சதவீதம் விற்பனை குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இடைப்பட்ட பற்றாக்குறையை பால் உபபொருட்கள் மூலம் ஆவின் சரிசெய்வதாகவும் பால் முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
பால் முகர்வர்கள் கூறியதாவது: “பால் கொஞ்சம் தட்டுப்பாடாகத்தான் இருக்கிறது. 100 லிட்டர் கேட்டால் 60 லிட்டர், 70 லிட்டர் என்றுதான் கொடுக்கிறார்கள். அங்கேயும் வரத்து குறைவாக இருக்கிறது.“எல்லா வகையான பாலும் சேர்த்து 500 லிட்டர் வர வேண்டும். ஆனால், அப்படி வரவில்லை. 300 முதல் 350 லிட்டர் வரைதான் வருகிறது. “பால் தேவை அதிகமாகத்தான் இருக்கிறது. 100 லிட்டர், 200 லிட்டர் கேட்டால், அதில் பாதியளவுதான் கொடுக்கிறார்கள். தற்போது விற்பனைக்கு பால் இல்லை.”
தமிழகத்தில் உற்பத்தியாகும் பாலில் பெரும்பகுதி தனியார் நிறுவனங்களுக்குச் செல்கிறது. பாலில் எத்தகைய கொழுப்பு அளவு இருந்தாலும், விவசாயிகளுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.43 முதல் ரூ.45 வரை தனியார் பால் நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால், ஆவினில் பாலில் உள்ள கொழுப்பு அளவுக்கு ஏற்ப லிட்டருக்கு ரூ.34 வரை குறைத்து வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆவினுக்கான பால் கொள்முதல் தொடர்ந்து குறைந்து வருவதுடன், விநியோகத் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஆவின் நிர்வாகம் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு, அந்நிறுவனத்தின் நஷ்டத்தைக் குறைக்க முயல்வதே முக்கிய காரணம் என பால் முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பால் முகவர் கூறுகையில், “ஆவின் பால் தட்டுப்பாடு என்பது கடந்த ஐந்து, ஆறு மாதங்களாகவே அதிகமாக இருக்கிறது. அதுவும் தற்போது தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு கிட்டத்தட்ட ரூ.6 உயர்த்தியுள்ளது. அதில் ரூ.5-ஐ ஊக்கத்தொகையாக அரசு ஈடு செய்யும் என்று கூறியிருக்கிறார்கள். ஒரு ரூபாயை ஆவின் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆவின் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த ஒரு ரூபாய் என்பது கூடுதல் இழப்பாகும். ஒரு நாளைக்கு ரூ.30 லட்சம், மாதத்திற்கு ரூ.1 கோடி என ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.12 கோடிக்கு மேல் கூடுதல் இழப்பு ஏற்படும்.
ஆவினின் இழப்பைக் குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஆவின் உயர் அதிகாரிகள் திட்டமிட்டு ஆவின் பால் விநியோகத்தைக் குறைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.” இப்படி ஆவின் நஷ்டத்தில் இயங்குவதற்கு, பால் கொள்முதல் செய்யும் விலைக்கும் விற்பனை செய்யும் விலைக்கும் இடையே பெரிய வேறுபாடு இல்லாததும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
தனியார் பால் நிறுவனங்கள் சமன்படுத்தப்பட்ட பாலை ஒரு லிட்டர் ரூ.57க்கு விற்பனை செய்யும் நிலையில், ஆவின் அதே பாலை ரூ.40க்கு விற்பனை செய்கிறது. பாலை கொள்முதல் செய்து, பதப்படுத்தி, சுத்திகரித்து, விநியோகத்துக்கு அனுப்புவதற்காக ஆவினுக்கு ஏற்படும் உற்பத்திச் செலவுக்கும், பால் விற்பனை மூலம் கிடைக்கும் தொகைக்கும் இடையே போதுமான நிதிச் சமநிலை இல்லை.
இதனால் 2025-26ஆம் ஆண்டில் ஆவின் ரூ.143 கோடி இழப்பைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தால், ஆவின் பக்கம் பால் உற்பத்தியாளர்கள் திரும்பக்கூடும். ஆனால், அவ்வாறு அவர்கள் திரும்பினாலும், அவர்களை வரவேற்கும் நிலையில் ஆவின் நிர்வாகம் இல்லை என பால் முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொள்முதல் விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையே நிதிச் சமநிலையை உருவாக்குவதும், நிர்வாகக் குழப்பங்கள், பால் வணிகத்தில் அரசின் தலையீடு மற்றும் விலையைக் கட்டுப்படுத்துவது போன்ற பிரச்சினைகளைச் சரிசெய்வதும் அவசியம்.
அமுல் நிறுவனத்தைப் போன்று முழு தன்னாட்சியுடனும், அரசின் தலையீடு இல்லாமலும் தொழில்முறை முறையில் ஆவின் செயல்படுவதற்கு வழிவகுப்பதே விவசாயிகளுக்கும், ஆவின் நுகர்வோருக்கும் நல்லது.
இதையும் படிங்க: சிறார் என சொல்லி தப்ப முடியாது! கொலை வழக்குகளில் சிறுவர்களுக்கு இனி என்ன தண்டனை? கோர்ட் முக்கிய முடிவு!