சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள விலங்குகளின் உணவு மற்றும் மருத்துவப் பராமரிப்புச் செலவுகளைப் பொதுமக்கள் அல்லது பிரபலங்கள் ஏற்கும் 'தத்தெடுப்புத் திட்டம்' நீண்டகாலமாகச் செயல்பாட்டில் உள்ளது. அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிவகார்த்திகேயன், பூங்காவில் உள்ள 'பிரக்ருதி' என்ற பெண் யானையைத் தத்தெடுத்துள்ளார்.
பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்த 6 மாத காலத்திற்கு இந்த யானையின் முழு உணவு மற்றும் பராமரிப்புச் செலவுகளைச் சிவகார்த்திகேயன் வழங்க உள்ளார். இதற்கான காசோலையை அவர் பூங்கா அதிகாரிகளிடம் வழங்கினார். பொதுவாக இது போன்ற விலங்குகள் தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதிக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னதாகப் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், "முக்கிய நிறுவனங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இது போன்று விலங்குகளைத் தத்தெடுப்பதன் மூலம் பூங்கா பராமரிப்புப் பணிகள் எளிதாக அமையும். மேலும், இது பொதுமக்களிடையே வனவிலங்குப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்" எனத் தெரிவித்தனர். ஏற்கனவே பலமுறை வண்டலூர் பூங்காவில் விலங்குகளைத் தத்தெடுத்துள்ள சிவகார்த்திகேயன், மீண்டும் ஒருமுறை தனது சமூகப் பொறுப்பை நிரூபித்துள்ளார்.
இதையும் படிங்க: சி.பி.ஐ. விசாரணை நிறைவு: டெல்லியிலிருந்து சென்னை புறப்பட்டார் விஜய்!
இதையும் படிங்க: பிப்.7ல் திமுக இளைஞரணி சந்திப்பு... பிரம்மாண்ட நிகழ்வில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின்..!