இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு (வயது 100) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட நுரையீரல் தொற்று மற்றும் மூச்சுத் திணறல் பிரச்னைகளால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி, நல்லகண்ணு தனது வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தலையில் தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அங்கு காபி அருந்தும்போது ஏற்பட்ட ஆஸ்பிரேஷன் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டது. மூச்சுத் திணறல் அதிகரித்ததால், நேற்றிரவு அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் அட்மிட்டான நல்லக்கண்ணு.. தவெக தலைவர் விஜய் செய்த செயல்..!!
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மூத்த மருத்துவர்கள் குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு, தற்போது நிலையான உடல்நிலையில் இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். மருத்துவமனை நிர்வாகம், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், விரைவில் பூரண நலம் பெறுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவராகவும், சமூக நீதிக்காகவும், உழைப்பாளர் உரிமைகளுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். அவரது உடல்நிலை மேம்பட வேண்டி அவரது கட்சித் தோழர்களும், ஆதரவாளர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், நல்லக்கண்ணுவை மருத்துவமனையில் நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் நல்லகண்ணுவின் குடும்பத்தினருடன் உரையாடி, மருத்துவர்களிடம் உடல்நல முன்னேற்றம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பு, நல்லக்கண்ணுவின் சமூகப் பணிகள் மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்களிப்பை மதிக்கும் வகையில் அமைந்தது. இந்த சந்திப்பின்போது அயலான் பட இயக்குனர் ரவிக்குமாரும் உடனிருந்தார்.

இதனிடையே சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், நல்லக்கண்ணுவின் உடல்நிலை மேம்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மருத்துவமனைக்கு நேரில் வருவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டார். நல்லக்கண்ணு, தமிழ்நாட்டில் சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர். அவரது உடல்நல முன்னேற்றத்திற்காக அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் அட்மிட்டான நல்லக்கண்ணு.. தவெக தலைவர் விஜய் செய்த செயல்..!!