சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் கோயிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார், காவல்துறை விசாரணையில் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டு மரணமடைந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த சம்பவத்தை தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட எதிர்கட்சிகள், தி.மு.க. கூட்டணியிலேயே இருக்கக்கூடிய கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தி.மு.க ஆட்சிக்கு எதிராக இந்த குரல் எழுப்பி வருவதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். இதற்குப் பிறகும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறை, அந்த உள்துறைக்குக் கீழே வரும் காவல்துறை என தி.மு.க ஆட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகமும் கொஞ்சம்கூட திருந்தவோ,வருந்தவோ இல்லை என சாடினார்.

மாறாக மழுப்பல் நடவடிக்கைகள், பணத்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை விலை பேசுவது, உண்மைச் செய்திகளை வெளியிடும் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது என அநீதி நடவடிக்கைகளையே தொடர்ந்து செய்து வருவதாக குற்றம்சாட்டினார். எப்.ஐ.ஆர்-ல் அஜித்குமார் காவல்துறைக் கட்டுப்பாட்டில் இருந்து இரண்டுமுறைத் தப்பிக்க முயன்றதாகவும், அதில், இரண்டாவது முறை தப்பிக்கும்போது தவறி விழுந்து, வலிப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளதாகவும், ஒரு மரணத்தில், கொஞ்சமும் இரக்கமோ... குற்றவுணர்வோ இல்லாமல், பொய்யே கூச்சப்படும் அளவுக்கு பொய்களை நிரப்பி கதை எழுதும் வேலைதான் இந்த எப்.ஐ.ஆர்-இல் வெளிப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுட்டு விஜய் எதுக்கு அரசியலுக்கு வரனும்? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!!

அஜித்குமாரின் காவல் மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் உயர் நீதிமன்றம், தி.மு.க ஆட்சிக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துவிடுமோ., விளம்பர மாடல் ஆட்சியின் வேஷம் கலைந்துவிடுமோ என்ற பதற்றத்தில், வெறும் மழுப்பல் நடவடிக்கை மட்டுமே மேற்கொள்வதாக கூறினார். எப்.ஐ.ஆரே இந்த லட்சணத்தில் இருக்கிறதென்றால், முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, அதே காவல்துறையால் நடத்தப்பட்ட கஸ்டடி மரணத்தை, எந்த லட்சணத்தில் விசாரிக்கும் என்பது நமக்குத் தெரியாதா என்றும் கேள்வி எழுப்பினார்.

அதனால், அஜித்குமார் கஸ்டடி மரணம் தொடர்பான வழக்கை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரித்ததைபோல, உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் மூளையாக இருந்து உத்தரவிட்ட உயர் அதிகாரிகளையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் பணத்தைக் காட்டி, சட்ட விரோதமாக சமாதானம் பேச முயன்ற தி.மு.க நிர்வாகிகளையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் தி.மு.க. ஆட்சியின் கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அது குறித்து வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா விட்ட வார்த்தை.. பறந்த ஃபோன் கால்.. இபிஎஸ்ஸிடம் விஜய் சொன்னது என்ன..?