தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான உத்திகள், கூட்டணி விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், பல்வேறு அணிகளின் தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் இந்தக் கூட்டத்திற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கோபிசெட்டிப்பாளையம்: அதிமுக பொதுக் கூட்டத்தில் தொண்டர் பரிதாப பலி..!! இபிஎஸ் இரங்கல்..!!
முன்னாள் அமைச்சர்களான கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, டாக்டர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் நேரடியாக வந்து மண்டபத்தைப் பார்வையிட்டு, ஈபிஎஸ் வருகை பாதை, இருக்கை ஏற்பாடுகள், உணவு வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அருகிலுள்ள திறந்தவெளியில் உணவு தயாரிப்பு, உணவு அருந்தும் இடம், வாகன நிறுத்தம் ஆகியவை தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் எல்இடி திரைகள் பொருத்தப்பட்டு, கூட்ட நிகழ்வுகளை தெளிவாகக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு வரும் உறுப்பினர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் பிரம்மாண்டமான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 10,000 பேருக்கு உணவு தயாரிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உணவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, இதில் சைவம் மற்றும் அசைவ வகைகள் அடங்கும்.
காலை உணவாக கேசரி, வடை, பொங்கல், இட்லி, சாம்பார், கார சட்னி, தேங்காய் சட்னி, காபி அல்லது டீ ஆகியவை வழங்கப்படும். மதிய உணவில் சைவ வகையில் தம்ஃப்ரூட் அல்பா, புடலங்காய் கூட்டு, சைனீஸ் பொரியல், மாவடு இஞ்சி, நிலக்கடலை மண்டி, பிளாக்காய் உருளை மசாலா, பருப்பு வடை, அப்பளம், ஊறுகாய், மோர் மிளகாய், வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, சாதம், கத்தரிக்காய் முருங்கக்காய் பீன்ஸ் சாம்பார், வத்தல் குழம்பு, தக்காளி ரசம், தயிர், பருப்பு பாயாசம், வாட்டர் பாட்டில், வாழைப்பழம் ஆகியவை உள்ளன.
அசைவ வகையில் பிரட் அல்வா, மட்டன் பிரியாணி, தாளிச்சா, ஆனியன் தயிர் பச்சடி, கத்திரிக்காய் கட்டா, மட்டன் குழம்பு, சிக்கன் 65, வஞ்சரை மீன் வருவல், முட்டை மசாலா, வெள்ளை சாதம், தக்காளி ரசம், தயிர், இஞ்சி புளி மண்டி, பருப்பு பாயாசம் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.

சைவத்தில் 2,000 பேருக்கும், அசைவத்தில் 8,000 பேருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது கட்சித் தொண்டர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் நிகழ்ச்சியில் மான் ஆட்டம், ஓயிலாட்டம், கரகாட்டம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள், எம்ஜிஆர், ஜெயலலிதா பேனர்கள், வளைவுகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு மெட்ரோ, நேர்குன்றம், மதுரவாயல், வானகரம் சந்திப்புகளில் கட்சித் தொண்டர்கள் கூடி வரவேற்பு அளித்தனர்.
கட்சியின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கூட்டம் அமையும் என தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள், அதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை தீர்மானிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. தேர்தல் உத்திகள் குறித்து விவாதம் நடைபெறும் என்பதால், கட்சி உறுப்பினர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடக்கம்... இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு கொடுத்த அதிமுகவினர்..!