இந்தியாவிலேயே முதல் முறையாக பணியாளர்கள் இல்லாமல் ‘டார்க் ஃபேக்டரி’ இயங்குகிறது. இந்தியாவின் முன்னோடி AI-இயங்கும் ‘டார்க் ஃபேக்டரி’ மாடல்களில் ஒன்றாக பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ் செமிகண்டக்டர் சிப் உற்பத்தியில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் பல்வேறு முன்னணி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் ஒன்றாக, செமிகண்டக்டர் சிப்புகள் மற்றும் மேம்பட்ட மின்னணு கூறுகளை தயாரிக்கும் பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
மனித தலையீடு மிகக் குறைவாக, ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தானியங்கி முறையில் உற்பத்தி நடைபெறும் “டார்க் ஃபேக்டரி” முறை தற்போது தொழில்துறையில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது. விளக்குகள் தேவையில்லாமல், மிகுந்த துல்லியத்துடனும் கட்டுப்படுத்தப்பட்ட சுத்தமான சூழலிலும் இயங்கும் இந்த தொழில்நுட்பம், இந்திய உற்பத்தித் துறையில் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.
இன்றைய உலகில் செல்போன்கள், கார்கள், கணினிகள், தொலைக்காட்சிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பங்களுக்கு செமிகண்டக்டர் சிப்புகள் அத்தியாவசியமாக மாறியுள்ளன. 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் செமிகண்டக்டர் துறை 110 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஈஸ்வர ராவ் நந்தம் கூறுகையில், செமிகண்டக்டர் உற்பத்தி என்பது மிக அதிக துல்லியமும் கட்டுப்பாடும் தேவைப்படும் செயல்முறை என்பதால், இந்த ஆலை செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக் தொழில்நுட்பத்துடன் தானியங்கி முறையில் இயங்குகிறது என்றார்.
இதையும் படிங்க: ஸ்லோவாக்கியா பல்கலைக்கழகத்தில் "ஏஐ இந்தியா இருக்கை"! பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!

மேலும், செமிகண்டக்டர் சிப்புகள் மற்றும் மேம்பட்ட மின்னணு கூறுகள் உற்பத்தியில், பாலிமாடெக் நிறுவனத்தின் ஒரகடம் ஆலை இந்தியாவின் முன்னோடி AI-இயங்கும் டார்க் ஃபேக்டரி மாடல்களில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார். இங்கு தயாரிக்கப்படும் செமிகண்டக்டர் சிப்புகள் மற்றும் மின்னணு கூறுகள் வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனங்கள், தொலைக்காட்சிகள், தொலைபேசிகள், தொழில்துறை உபகரணங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தைத் தொடர்ந்து, பாலிமாடெக் குழுமம் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளிலும் தனது தொழில்துறை செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய உற்பத்தி ஆலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மருத்துவத் துறைக்கான புதிய தொழில்நுட்பங்களிலும் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. குழந்தைகள் மற்றும் வயதான நோயாளிகளிடம் ரத்த மாதிரி எடுக்கும்போது ரத்த நாளங்களை கண்டறிவதில் ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில், பாலிமாடெக் நிறுவனம் புதிய “Vein Finder” கருவியை உருவாக்கியுள்ளது. இந்த கருவி மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத் துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படக்கூடிய புதுமையான தொழில்நுட்பமாகும். இந்த கருவியின் சந்தை மதிப்பு இரண்டு லட்ச ரூபாய்க்கும் மேல் இருக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "தேசிய மருத்துவர் தினம்"..! மக்கள் நலனுக்காக அயராத உழைப்பு..! முதல்வர் விஜய் வாழ்த்து..!