முன்னதாக பாமகவில் இளைஞரணி தலைவர் முகுந்தன் நியமனம் செய்யப்பட்டார். இதன் காரணமாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கட்சி மேடையிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை அடுத்து பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், கட்சியினர், குடும்பத்தினர் என இரு தரப்பிலும் ஆலோசனை நடத்தப்பட்டு பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு இருவருக்கும் இடையிலான பிரச்சினை சுமுக முடிவை எட்டியதாக அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலை அருகே வரும் மே 11 ஆம் தேதி வன்னியர் சங்கத்தின் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டு குழு தலைவராக அன்புமணியை நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார். இதனிடையே இந்த மாநாட்டையொட்டி அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வீடியோ பாடல் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்தப் பாடலில், ஒரு இடத்தில் மட்டுமே ராமதாஸின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. முழுமையாக அந்தப் பாடல் அன்புமணி பற்றியே இருந்தது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் பாமக நிறுவனர் ராமதாஸ், தனியாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதையும் படிங்க: மே பிறந்தும் வழி பிறக்கலையே! மாணவர் சேர்க்கையை நிறுத்த திட்டமா? லெப்ட் ரைட் வாங்கிய ராமதாஸ்!

அதில், அன்புமணியின் படம் ஒரு இடத்தில் கூட இடம்பெறாத நிலையில், ஐயா அழைக்கிறார் என்று அந்தப் பாடல் தொடங்கியது. இருவரும் தங்களை முன்னிலைப்படுத்தி தனித்தனியாக வீடியோ வெளியிட்டதால், அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு நீடிப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்நிலையில், சித்திரை முழுநிலவு மாநாடு 2ம் பாடல் பாமக சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் சமூக வலைதள பக்கத்தில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த முதல் பாடல் அன்புமணியை முன்னிலைப்படுத்தி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ராமதாஸை முன்னிலைப்படுத்தி அடுத்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா என்ற வரிகளுடன் இந்தப் பாடல் தொடங்குகிறது. அதன்பிறகு பாதிக்கு மேல் அன்புமணியை பிரதானப்படுத்திய வரிகள் இடம்பெறுகின்றன. அய்யா வழியில் எங்கண்ணன்.. மக்களைக் காக்கும் அன்பண்ணன் என்ற வரிகளுடன் அன்புமணியை புகழ்கிறது இந்தப் பாடல். முதல் பாடலில் ராமதாஸ் பற்றி எதுவும் இல்லாத நிலையில், இரண்டாவது பாடலில் ராமதாஸையும் முன்னிலைப்படுத்தி புதிய பாடலை வெளியிட்டு சர்ச்சையை அன்புமணி முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 139 ரூபாய் எப்படி பத்தும்? நாங்க ஆட்சிக்கு வந்தால்... சுளுக்கெடுத்த ராமதாஸ்..!