பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார். வன்னியர் இட ஒதுக்கீடு கோரி 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. இதற்கு முன்னுதாரணமாக, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வழங்கிய உதவியை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1987 செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கிய ஒரு வார கால சாலை மறியல் போராட்டத்தின்போது, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரிய மக்களின் அமைதியான போராட்டம் காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் 21 பேர் உயிரிழந்தனர். இந்தத் தியாகிகளின் குடும்பங்கள் இன்றும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன. அவர்களது வாரிசுகள் வாழ்வாதாரம் இன்றி போராடும் நிலையில் இருப்பதாக அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அன்புமணி ராமதாஸ் நினைவுகூர்ந்தார். அந்த உயிரிழப்புகளுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட 31 குடும்பத்தினருக்கு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார். மேலும், ஒரு குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் கருணைத் தொகையும் அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை வரவேற்ற அன்புமணி, இத்தகைய உதவிகள் ஒரு சாராருக்கு மட்டும் அல்லாமல், பல்வேறு காலகட்டங்களில் தியாகம் செய்த அனைவருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இந்து மதம் மீது ஒவ்வாமையா.? அமைச்சர் ராஜ்மோகன் செயல் சரியல்ல... நயினார் காட்டம்..!
வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தால் நூற்றுக்கணக்கான சமூகங்கள் பயனடைந்துள்ளதாக அன்புமணி சுட்டிக்காட்டினார். அவர்களது குடும்பங்கள் இன்றும் வாழ்வாதாரப் பிரச்சினையில் தவிப்பதை சுட்டிக்காட்டிய அவர், கரூர் சம்பவத்தில் காட்டிய அதே கருணையை வன்னியர் தியாகிகளின் வாரிசுகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த நடவடிக்கை சமூக நீதிக்கு உறுதுணையாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சினிமா கிளைமேக்ஸ் போல கத்தி பேசுறாரு..! முதல்வர் விஜய்யை விமர்சித்த டிடிவி தினகரன்..!