தமிழ்நாடு அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சமுதாயத்தை மையமாகக் கொண்டு ராமதாசால் தொடங்கப்பட்டது. இந்தக் கட்சி, சமூக நீதி மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை முன்னிறுத்தி, வன்னியர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையேயான உட்கட்சி மோதல், பாமகவின் ஒற்றுமையையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த மோதல், தலைமைப் பதவி, கட்சி நிர்வாகம், கூட்டணி உத்திகள், மற்றும் தனிப்பட்ட மோதல்களால் தீவிரமடைந்து, இரு தரப்பினரும் தனித்தனியாக செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டங்களை நடத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் இன்று செயற்குழு கூட்டம் நடத்தினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்புமணியை செயற்குழுவில் இருந்து நீக்கிய ராமதாஸ் 21 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவரது மகள் ஸ்ரீகாந்தி கலந்து கொண்டார். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது என்னவென்றால், முகுந்தனுக்கு கட்சிப் பதவி கொடுப்பதால் தான் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே பிரச்சனை தொடங்கியது. தற்போது ராமதாஸ் தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ காந்தியின் மகன்தான் முகுந்தன்.
இதையும் படிங்க: #BREAKING: தைலாபுரத்தில் பரபரப்பு.. பாமகவினர் தீக்குளிக்க முயற்சி.. காரணம் கேட்டா அதிர்ந்து போவீங்க!

ஏற்கனவே முகுந்தனுக்கு பதவி கொடுத்ததால் பிரச்சனை வெடித்துள்ள நிலையில் அவரது தாயையும் தற்போது செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வைத்துள்ளது அன்புமணியை நிரந்தரமாக ஓரம் கட்டும் சம்பவமாகவே கருதப்படுகிறது. ராமதாஸ் கலவையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எல்லாமே நான் தான் என்பதை போல ராமதாஸ் பேசி இருந்தார். இதற்கு ஏட்டிக்கு போட்டியாக, சென்னை பனையூரில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் கட்சி நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஜூலை இருபதாம் தேதி விழுப்புரத்தில் போராட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய செயற்குழு செல்லாது எனவும் அன்புமணி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமக பொதுக்குழுவால் தேர்வு மூலம் செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் அன்புமணி என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அன்புமணி மேற்கொள்ளும் 100 நாள் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை வெற்றி பெற செய்ய கடுமையாக உழைப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்படியே தந்தையும் மகனும் மாறி மாறி போட்டுக் கொள்ளும் சண்டையை பாமக தொண்டர்கள் தான் யாரை ஆதரிப்பது என தெரியாமல் குழம்பிப் போய் உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING: எனக்கே முழு உரிமை.. கூட்டணி தான் முடிவு! அன்புமணி ஆதரவாளர்களை சுளுக்கெடுத்த ராமதாஸ்!