தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை மிக மோசமாக பாதிக்கக் கூடிய சிக்கல் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் இந்தக் கடிதத்தை எழுதுவதாக குறிப்பிட்டார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த காலங்களில் மூடப்பட்ட மணல் குவாரிகளுக்கு பதிலாக 13 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட புதிய மணல் குவாரிகளைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், கடலூர் மாவட்டம் கிளியனூர் கிராமத்தில் மணல் குவாரி அமைக்க தங்களின் அமைப்பு தடையின்மைச் சான்றிதழ் வழங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன., மீதமுள்ள குவாரிகளுக்கும் தடையின்மைச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் தேவை குறித்து தாங்கள் நன்கு அறிவீர்கள் என்றும் தமிழக அரசால் தொடங்கப்படும் மணல் குவாரிகள் அனைத்திலும் விதிகளுக்கு மாறாகவும், அளவுக்கு அதிகமாகவும் மணல் வெட்டி எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மணல் குவாரியிலும், எந்த நேரமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரக்குந்துகள் காத்திருக்கும் நிலையில், வெறும் 10 சரக்குந்து அளவுக்கு மட்டுமே மணல் எடுக்கப்படுவதாக அரசு கூறுவது அப்பட்டமான பொய் என்பதை தங்களின் முதல் பார்வையிலேயே புரிந்து கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஊருக்கு நடுவே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க துடிப்பது ஏன்? அன்புமணி சரமாரி கேள்வி..!

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் இருந்து இரு ஆண்டுகளில் 4.05 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே மணல் எடுத்ததாக தமிழக அரசு குறிப்பிட்டிருக்கும் நிலையில், அதை விட 7 மடங்குகள் அதிகமாக 27.70 லட்சம் யூனிட்டுகள் மணல் எடுக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாகவும், எனவே, தமிழ்நாட்டில் புதிதாக ஆற்று மணல் குவாரிகள் அமைக்க தங்கள் ஆணையம் அனுமதி அளிக்கக்கூடாது என்றும் அதுமட்டுமின்றி, ஏற்கனவே செயல்பட்டு வரும் மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளையும் திரும்பப் பெற்று அந்த குவாரிகளை மூடுவதற்கு ஆணையிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் இதுவரை மணல் குவாரிகள் செயல்பட்டு வந்த பகுதிகளில் சுற்றுச்சூழல் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். அதனடிப்படையில் அப்பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: குப்பையில வீச தான் மாநிலக் கல்வி கொள்கையா? பதில் சொல்லுங்க ஸ்டாலின்.. ஃபுல் ஃபார்மில் ராமதாஸ்!!