சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் அருகே நூற்றுக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் இன்று 16-வது நாளாகத் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட தங்களது நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தால், சென்னையின் மிக முக்கியமான போக்குவரத்து மையமான கத்திப்பாரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஸ்தம்பித்துள்ளது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 313-ன்படி, பகுதிநேர அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 51 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தங்களை இன்னும் தற்காலிகப் பணியாளர்களாகவே வைத்திருப்பது நியாயமற்றது என அவர்கள் ஆதங்கப்படுகின்றனர். நாங்கள் முறைப்படி அரசு ஊழியர்களாக அங்கீகரிக்கப்படாததால், அரசு ஊழியர்களுக்கான எந்தச் சலுகைகளும் கிடைப்பதில்லை. அதேசமயம், அரசுப் பணியில் இருப்பதால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையான ₹1,000-மும் எங்களுக்கு மறுக்கப்படுகிறது. நாங்கள் எங்கே தான் போவது? என ஊழியர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.

தற்போது ஊழியர்களுக்கு ₹15,000-மும், உதவியாளர்களுக்கு ₹6,000-மும் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இதனை முறையே ₹19,500 மற்றும் ₹15,700 ஆக உயர்த்த வேண்டும் என்பது அவர்களின் பிரதான கோரிக்கையாகும். 60,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவது, 12 மாத கால மகப்பேறு விடுப்பு, ஓய்வூதியத்தை ₹6,750-ஆக உயர்த்துவது மற்றும் பணிக்கொடையாக ₹5 லட்சம் வழங்குவது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நீடிக்கிறது.
இதையும் படிங்க: பாஜக ஆட்சியில் மீனவர் உயிரிழப்பு இல்லை...! தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா அதிரடி பேச்சு!
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக அரசு மௌனம் காப்பதாகக் குற்றம் சாட்டும் அங்கன்வாடி ஊழியர்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண்கள் ஓட்டுகளுக்கு குறி..!! மகளிர் உரிமை தொகையில் தான் ட்விஸ்ட்டே.!! திமுக மாஸ்டர் பிளான்..!!