அரசுப் பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளில் திமுக அரசு காட்டும் மெத்தனமே இத்தகைய தொடர் விபத்துகளுக்குக் காரணம் என அவர் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நேரிட்ட கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்த செய்தி கேட்டுத் தான் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாகப் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்ட அவர், தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமீபகாலமாக அரசுப் பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதும், பொதுமக்களின் உயிர்கள் பறிபோவதும் கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளன. தொடர்ச்சியாக நடக்கும் இத்தகைய விபத்துகள், பேருந்துகளின் முறையான பராமரிப்பு, ஓட்டுநர்களின் பணிநேர மேலாண்மை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் திமுக அரசு காட்டும் அலட்சியத்தின் நேரடி விளைவே ஆகும். அரசுப் பேருந்துகளின் பராமரிப்புக்காக நிதி ஒதுக்கப்படுகிறதா, அந்த நிதி உண்மையாகவே எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது" எனச் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: விருத்தாச்சலம் அருகே கோர விபத்து: அரசு பேருந்து - கார்கள் மோதி 7 பேர் உடல் நசுங்கி பலி!
மேலும், கடந்த மாதமே அரசுப் பேருந்துகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து நிலவும் அலட்சியம் பற்றித் தாங்கள் எச்சரித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தித் திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இந்தத் துயரமான விபத்து நிகழ்ந்ததற்குக் காரணம் என அவர் வாதிட்டுள்ளார். தொடர் விபத்துகளையும், அது தொடர்பான முன்னெச்சரிக்கைகளையும் புறக்கணித்த திமுக அரசே இந்த 9 பேர் மரணத்திற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என அண்ணாமலை தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: "மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0": தேமுதிக கடலூர் நாட்டிற்கு பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு!