தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் திட்டம் கடந்த 15ம் தேதி அன்று சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மக்களுக்கு அரசு சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் 10,000 முகாம்கள் வரும் நவம்பர் 30ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் ஊரகப் பகுதிகளில் 46 சேவைகளும், நகர்ப்புறப் பகுதிகளில் 43 சேவைகளும் வழங்கப்படுகின்றன.

இம்முகாம்கள் மூலம் பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு, மின்சார கட்டண பெயர் மாற்றம், சுகாதார அட்டை, கடன் விண்ணப்பங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தவறவிட்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. முகாம்களுக்கு முன்பு, தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று விண்ணப்பப் படிவங்களையும், தேவையான ஆவணங்கள் பற்றிய தகவல்களையும் வழங்குகின்றனர்.
இதையும் படிங்க: சோலி முடிஞ்சுது..! ஜெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை... தவிக்கும் நடுத்தர மக்கள்..!
தூத்துக்குடியில் ஒரே நாளில் 3,205 மனுக்கள் பெறப்பட்டன, இது திட்டத்தின் மக்கள் செல்வாக்கை உணர்த்துகிறது. மேலும் 45 நாட்களுக்குள் மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வு காணும் இத்திட்டம், திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நல முன்னெடுப்பாகப் பாராட்டப்படுகிறது. மக்கள் அரசு அலுவலகங்களை நாடாமல், வீட்டு வாசலிலேயே சேவைகளைப் பெறுவதற்கு இத்திட்டம் பாலமாக அமைகிறது.

இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (23.7.2025) 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது. மாதவரம் மண்டலம், வார்டு-24ல் புனித அந்தோணி நகர், ஜி.என்.டி. சாலையில் உள்ள தியா திருமண மண்டபம், தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-41ல் மணலி சாலை, எச்.6, காவல் நிலையம் அருகில் உள்ள பாரத் பெட்ரோல் பேங்க் வாகன நிறுத்த இடம், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74ல் பெரம்பூர், மல்லிகாபுரம், கிருஷ்ணதாஸ் பிரதான சாலையில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-111, மாதிரி பள்ளிச் சாலையில் உள்ள சமூக நலக்கூடம், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-148ல் நெற்குன்றம், என்.டி. பட்டேல் சாலை, ஜி.எம். மஹால், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-194ல் ஈஞ்சம்பாக்கம், கைலாஷ் கார்டன் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களே.. இனி பார்க்கிங்கிற்கு 'NO CHARGE'.. சென்னை மாநகராட்சி சொன்ன குட் நியூஸ்..!