தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 21ம் தேதி காலை நடைபயிற்சியின் போது ஏற்பட்ட லேசான தலைசுற்றல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனைகளுடன், 3 நாட்கள் தொடர்ந்து ஓய்வில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோரும் முதல்வர் ஸ்டாலினின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் நேரில் சென்று முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் முதலமைச்சர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முதல்வருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது.. அவர் இப்போது நலமுடன் இருக்கார்.. அமைச்சர் துரைமுருகன் தகவல்..!!
இந்த சூழலில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின். நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும் முதலமைச்சர், ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் காணொலி மூலம் மக்களுடன் கலந்துரையாடினார்.
காணொளி வாயிலாக, மக்களின் கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் குறித்து விவரங்களை கேட்டறிந்து, அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், கன்னியாகுமரி, கோவை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களுடன் இத்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து 4-வது நாளாக மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அமைச்சர் துரைமுருகன், இன்று அப்போலோ மருத்துவமனைக்கு சென்று முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வருக்கு இன்று காலை ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு அடைப்பு எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவது குறித்து மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சனை தொடர்பாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில் இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதய சிகிச்சை மருத்துவர் டாக்டர் ஜி.செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுனர் குழுவின் அறிவுரையின்படி இதனை சரி செய்வதற்கான சிகிச்சை முறை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதலமைச்சர் தற்போது நலமாக உள்ளார். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: படுகொலை செஞ்சுட்டு பரிகாரம் தேடுறீங்களா? தயவுசெஞ்சு கொச்சைப்படுத்தாதீங்க! வெளுத்து வாங்கும் அன்புமணி!