தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் அப்பாவு இன்று நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்து தற்போதைய அரசின் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த காலத்தில் கட்டுப்பாடற்ற மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், அறிவிக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு மின்வெட்டு மற்றும் மின்தடைகள் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். தமிழக மின்வாரியத்தில் செயற்கையாக மின் தட்டுப்பாடு உருவாக்கப்பட்டுள்ளதாக அப்பாவு கூறினார். இதனைக் காரணம் காட்டி மின்வாரியத்தை அதானி நிறுவனத்திற்கு ஒப்படைக்கும் திட்டம் நடைபெறுவதாகவும், அதானி 25 முதல் 50 சதவீதம் வரை மின் கட்டண உயர்வு கோரியதாகவும், அதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பினார்.
குடிநீர் விநியோகம் சேலத்தில் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதையும், தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றி போராட்டத்திற்குத் தள்ளிவிட்டதாகவும், அவர்களுடன் விஜய் பேசக்கூட சம்மதிக்காததையும் அவர் குறிப்பிட்டார். தூய்மைப் பணிகள் தனியாருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், விஜய் அரசு அதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: "டப்பிங் முதல்வர் விஜய்... அரைக்கால் காக்கி டவுசர் நிர்மல் குமார்"..! அப்பாவு கடும் விமர்சனம்.!!

மேலும் முதலமைச்சர் விஜய் லண்டனுக்கு முதலீடு ஈர்க்கச் சென்றதாகக் கூறப்பட்டாலும், அரசு முறைப்பயணத்திற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், மத்திய அரசு அனுமதி மற்றும் அதிகாரிகள் இல்லாமல் சென்றதாகவும் அப்பாவு விமர்சித்தார். நடிகை திரிஷாவுடன் டீ அருந்திய செய்தியை மட்டும் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததைக் குறிப்பிட்டு, “திரிஷா வீட்டிலிருந்து பார்த்தால் சட்டமன்றம் தெரிய வேண்டும் என்பதற்காக பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ” என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக வெற்றிக் கழக அரசு ஊழல் இல்லை என்று பிரச்சாரம் செய்தாலும், லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்வதாகவும், இதுவரை இல்லாத மோசமான ஆட்சி நடைபெறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிக்க நேரம் வழங்க மறுப்பதாகவும், ஆதார் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோரின் சிக்னல்களின்படி செயல்படுவதாகவும், சுயமாக இயங்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அப்பாவு தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற வரலாற்றில் இதுபோன்ற ஆணவப் போக்குடன் செயல்பட்ட சபாநாயகர் யாரும் இல்லை என்று வலியுறுத்திய அவர், தனது ஐந்து ஆண்டு நிர்வாகத்தில் ஒருமுறைகூட தலையிடவில்லை என்று நினைவூட்டினார்.
இதையும் படிங்க: "நாகரீகமில்லா கூத்தாடிக்கு முதல்வர் பதவி ஒரு கேடா"..! அப்பாவு விமர்சனம்... பரபரப்பு..!!