பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரை 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவரின் நினைவிடம் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அவருக்கு முழு உருவ சிலை வைக்க காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையும் படிங்க: அண்டை மாநிலங்களில் அணைகட்ட கூட தமிழ்நாட்டு மண்.. கொள்ளையின் கோரமுகம்.. சீமான் காட்டம்..!

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிலை வைக்க அனுமதி அளிப்பதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து முழு உருவச் சிலையை திறக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. இந்த நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணியை நடத்தினர். ஆம்ஸ்ட்ராங்க் மனைவி பொற்கொடி, அவரது மகள் சாவித்திரிபாய், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என ஏராளமானோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவரது முழு உருவச்சிலை திறக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கில் மகள் சாவித்திரிபாய் தனது தந்தையின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக சென்னை முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: சமூகநீதியின் துரோகி திமுக... யாரை ஏமாத்துறீங்க? சாட்டை சுழற்றிய அன்புமணி!