விளம்பர மோகத்திற்காகக் குட்டிக் குழந்தைகளை வதைக்கலாமா சி.எம். சார் என தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்புக் குழு செயலாளர் அருண்ராஜ் கேள்வி எழுப்பினார். சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வருகைக்காக, ஞாயிற்றுக்கிழமை அன்று கூட ஆரம்பப் பள்ளி மாணவ, மாணவிகளைப் பள்ளிக்கு வரவழைத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என தெரிவித்து உள்ளார்.
முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான கொளத்தூரில், எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பள்ளிக் கட்டடத் திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்திருந்ததால், ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் மாணவ, மாணவிகளைக் கட்டாயப்படுத்தி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவழைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் வழக்கம் போலத் தனது விளம்பரத்திற்காக, சொல்லிக்கொடுத்தபடி மாணவ, மாணவிகளுடன் உரையாடிவிட்டு, நடித்துச் சென்றிருக்கிறார் என்றும் கூறினார். விடுமுறை நாட்களில் கூடப் பள்ளி மாணவர்களை வதைக்கும் அளவுக்கு இந்த விளம்பர மோகம் தேவையா என்று கேட்டார்.
இதையும் படிங்க: விஜய் துணை முதல்வரா? NDA கூட்டணியில் அதிரடி திருப்பமா? நயினார் பளீச் பதில்..!!
ஞாயிறு அன்று மாணவர்களைப் பள்ளிக்கு வரவைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குவது எந்த விதத்தில் நியாயம் என்றும் மாணவர்களுக்குக் கற்றலுக்கு ஏற்ப மகிழ்ச்சியான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய அரசே, விளம்பரத்திற்காக இப்படி நாடகம் போடலாமா எனவும் கேள்வி எழுப்பினார். உங்கள் விளம்பர அரிப்பைத் தீர்த்துக்கொள்ள உடன்பிறப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் இனியாவது பள்ளி மாணவ, மாணவியரை விட்டுவிடுங்கள் சி.எம். சார் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜயை பின் தொடர்ந்ததால் விபத்தில் சிக்கிய இளைஞர்.. நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்..!!