தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேகமலை மற்றும் வருசநாடு மலைப்பகுதிகள் தற்போது பெரும் கவலையை ஏற்படுத்தும் விவகாரமாக மாறியுள்ளன. உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் பிறப்பித்த உத்தரவின்படி, ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு வாழும் மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவில், காவல்துறை ஒத்துழைக்காவிட்டால் துணை ராணுவப் படையை அழைத்து நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பது மலைக்கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
ஆகஸ்ட் 28-க்குள் தொடர்புடைய அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கெடு நெருங்கி வரும் நிலையில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதிகளில் வாழ்ந்து வரும் சுமார் ஐயாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்து வருகின்றனர். இவர்களில் பழங்குடியினரும் அடங்குவர். பல தலைமுறைகளாக இங்கு குடியிருந்து விவசாயம் செய்து, தேயிலைத் தோட்டங்களிலும் பிற தொழில்களிலும் ஈடுபட்டு வரும் இவர்கள், தங்களை ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதுவது அநியாயம் என வாதிடுகின்றனர்.

இந்தப் பின்னணியில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்கள் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், மலைக்கிராம மக்களின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொதுவான கருத்தை முன்வைத்தனர். அதிமுக உறுப்பினர் ஒருவர், மேகமலையில் தொண்ணூற்றெட்டு கிராமங்களில் வாழும் மக்களை வெளியேற்றக்கூடாது என்றும், அரசு கொள்கை முடிவெடுத்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அது என்ன பவுடர்..? திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்றீர்களா..? திமுக - தவெக காரசார விவாதம்..!!
சிபிஎம் உறுப்பினர், இந்தப் பகுதியை காப்புக்காடாக அறிவித்த பிறகு வனத்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் மக்கள் விளைபொருட்களை விற்கக்கூட முடியாமல் தவிப்பதாகவும், சாலை, குடிநீர், பள்ளி, ரேஷன் போன்ற அடிப்படை வசதிகளை தமிழக அரசே வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். சிபிஐ உறுப்பினர், உச்ச நீதிமன்ற உத்தரவில் துணை ராணுவத்தை அழைக்கலாம் என்று கூறியிருப்பது வேதனையளிப்பதாகவும், கடந்த கால ஆட்சிகளில் பட்டா வழங்கியிருந்தால் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: மாணவர்கள் கொலை... தொடரும் கொடூரங்கள்..! பேரவையில் உதயநிதி ஸ்டாலின் தாக்கு..!!