கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் நீதிபதியை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல்குமாருக்கு இன்று திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த உத்தரவு, அரசியல் வட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தமிழக அரசியல் மற்றும் சமூக வலைதளங்களை ஆட்டிப்படைத்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது விஜய் குறித்து சில கருத்துக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து சமூகவலைத்தளத்தில் அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதேவேளை, அவதூறுகள் பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்படுகின்றன.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை... A3 குற்றவாளி அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமின்... நீதிமன்றம் உத்தரவு...!
திண்டுக்கல் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் நிர்மல் குமார், நீதிபதியின் தீர்ப்பை விமர்சித்தும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்தப் பதிவுகள் அரசியல் விமர்சனமாகவும், அவதூறாகவும் கருதப்பட்டன. இதனையடுத்து கடந்த அக்டோபர் 12ம் தேதி அன்று, சாணார்பட்டி போலீசார் நிர்மல்குமாரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பதிவுகள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை குற்றம் சாட்டுவதாகவும், நீதிநிலைக்கு எதிரானவையாகவும் கூறப்பட்டது.
த.வெ.க. தலைமை அமைப்பு இந்த கைதை அரசின் அடக்குமுறையாக கண்டித்து, உடனடி விடுதலை கோரியது. அதிமுகவினர் சமூக வலைதளங்களில் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து, "எதிர்க்கட்சி செயல்பாடுகளை அடக்கும் முயற்சி" என்று விமர்சித்தனர். இதனிடையே செந்தில்குமார் ஜாமீன் கோரி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் சார்பில், பதிவுகள் அரசியல் விழிப்புணர்வுக்காகவே எழுதப்பட்டவை என்றும், அவதூறு இல்லை என்றும் வாதிடப்பட்டது. நீதிமன்றம், குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டாலும், சமூக வலைதள சுதந்திரத்தை கருத்தில் கொண்டு, நிர்மல் குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், அடுத்த விசாரணை வரை போலீஸ் நிலையத்திற்கு அறிக்கை அளிக்கவும், சம்பந்தப்பட்ட வழக்குகளில் தலையிட வேண்டாம் என்றும் நிபந்தனைகளை விதித்தது.

இந்த உத்தரவு தவெகவினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சி செயலாளர் ஒருவர், "இது நியாயமான தீர்ப்பு. அரசியல் விமர்சனத்துக்கு ஜனநாயகத்தில் இடம் உண்டு" என்று கூறினார். இருப்பினும், காவல்துறை, சம்பவம் தொடர்பான விசாரணையில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இச்சம்பவம், தமிழக அரசியலில் சமூக வலைதளங்களின் பங்கு மற்றும் அவதூறு சட்டங்களின் பயன்பாட்டைப் பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. கரூர் சம்பவத்தின் முழு விசாரணை அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சொத்துவரி முறைகேடு வழக்கில் திடீர் திருப்பம்... மதுரை மேயரின் கணவர் பொன்வசந்திற்கு ஜாமீன்...!