வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினால், அவர் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு முன்பே கைது செய்யப்படுவார் என்று அந்நாட்டு சட்டத்துறை அமைச்சர் அசாதுஜமான் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, வங்கதேச அரசியல் வட்டாரங்களிலும் சர்வதேச அளவிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் பின்னர், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவர் மீது வங்கதேசத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது உயிருக்கு அச்சம் இருந்தாலும் வங்கதேசம் திரும்பும் முடிவில் உறுதியாக இருப்பதாக ஷேக் ஹசீனா தெரிவித்திருந்தார். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு திரும்புவது குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில், சட்டத்துறை அமைச்சரின் புதிய கருத்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சரணடைய தயார்!! ஷேக் ஹசீனா திட்டவட்டம்! டிசம்பரில் வங்கதேசம் திரும்ப திட்டம்!!

இதுகுறித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் அசாதுஜமான், “ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேசம் திரும்புவதற்கான உரிமை உள்ளது. ஆனால், அவர் மீது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் சட்ட நடைமுறைகள் தொடரும். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நாடு திரும்பினால் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு முன்பே கைது செய்யப்படுவார். சட்டம் எங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எந்த விதிமுறையும் மீறப்படாது” என்று தெரிவித்தார்.
மேலும், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்திருப்பதால், அவர் வங்கதேசம் திரும்புவது எப்படி என்பது அவரது தனிப்பட்ட விவகாரம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த அறிவிப்பால், ஷேக் ஹசீனா உண்மையில் வங்கதேசம் திரும்புவாரா, அல்லது வெளிநாட்டிலேயே தங்குவாரா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. வங்கதேச அரசியல் சூழ்நிலை தொடர்ந்து பரபரப்பாக இருக்கும் நிலையில், அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசின் முடிவுகள் மீது சர்வதேச கவனம் திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: கரப்பான்பூச்சியை தொடர்ந்து 'பிராய்லர் சிக்கன் கட்சி' வைரல்... வங்கதேசத்தில் வெடித்த மாணவர் போராட்டம்!