மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க இன்று முதலமைச்சர் விஜய் வருகை தந்தார். இதையொட்டி அவரது பாதுகாப்புக்காக சுமார் 44.7 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஏற்பாடுகளுக்கு அதிக அளவில் பொது நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், இது தேவையற்ற ஆடம்பரம் என்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வழக்கமாக முதலமைச்சர் உள்ளிட்ட விஐபிக்களின் வருகையின் போது காவல்துறை அதிகாரிகள் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்படுவது, உளவுத் தகவல்கள் சேகரிப்பு, கூடுதல் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்துப் பணிகள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இருப்பினும், சாலையின் இரு பக்கங்களிலும் நீண்ட தூரத்திற்கு தடுப்புகள் அமைப்பது அவசியமற்ற செலவு என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் மேட்டூர் அணையை முதல்வர் விஜய் திறந்து வைக்கச் சென்ற போதும் இதேபோன்ற சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அப்போது சுமார் ரூ.5 கோடி வரை செலவானதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. அணை வெறும் 45 நாட்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும் நிலையில், குறுவை சாகுபடிக்கு உதவ முடியாத இந்த நிகழ்வுக்காக இவ்வளவு செலவு செய்வது ஏன் என்ற கேள்விகள் அப்போதே எழுந்தன.
இதையும் படிங்க: மதுரையில் முதல்வர் விஜய்..!! பரபரப்பை கிளப்பிய போஸ்டர்!! கடுப்பில் ரசிகர்கள்.. நடந்தது என்ன?

அதே விமர்சனங்கள் இப்போது மதுரை நிகழ்ச்சிக்கும் எழுந்துள்ளன. மதுரையில் 44.7 கி.மீ தூரத்திற்கு இருபுறமும் தற்காலிக தடுப்புகள் அமைப்பதற்கு தோராயமாக ரூ.1.8 கோடி முதல் ரூ.3.6 கோடி வரை செலவாகியிருக்கும் என மதிப்பிடப்படுகிறது. அரசு மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்த விதிகளின்படி, இரும்பு அல்லது மரத் தடுப்புகளின் வாடகை, போக்குவரத்து மற்றும் தொழிலாளர் கூலி ஆகியவற்றை உள்ளடக்கிய செலவு ஒரு மீட்டருக்கு ரூ.200 முதல் ரூ.400 வரை கணக்கிடப்படுகிறது.
குறைந்தபட்சம் ரூ.200 என எடுத்துக்கொண்டால் சுமார் ரூ.1.79 கோடியும், அதிகபட்சம் ரூ.400 எனக் கணக்கிட்டால் ரூ.3.58 கோடியும் வருகிறது. இந்த பெரிய தொகையை நலத்திட்டங்களுக்கு ஒதுக்கியிருக்கலாம் என்ற கருத்து பரவலாக வெளிப்பட்டுள்ளது. விஐபி பாதுகாப்பு அவசியம் என்றாலும், அதை மிதமான மற்றும் திறமையான முறையில் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் வலியுறுத்தியுள்ளன.
இதையும் படிங்க: தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!