திருப்பூர் மாநகராட்சிக் குப்பைகளைச் சின்னக்காளிபாளையம் பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், குப்பை மேலாண்மையில் மாநகராட்சி நிர்வாகம் காட்டும் அலட்சியத்தைக் கண்டித்து, பாஜக சார்பில் திருப்பூரில் இன்று பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. இருப்பினும், இதற்குத் திருப்பூர் போலீஸார் அனுமதி மறுத்திருந்தனர். தடையை மீறிப் போராட்டப் பகுதியில் பாஜகவினர் பயன்படுத்திய பிரச்சார வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்ததால் அங்குப் பதற்றம் அதிகரித்தது.
போலீஸாரின் தடையையும் மீறி, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று போராட்டக் களத்திற்கு நேரில் வருகை தந்தார். "மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் குப்பைகளைக் கொட்ட அனுமதிக்க முடியாது" என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். அண்ணாமலை வருகையையொட்டி திருப்பூர் குமரன் சிலை முன்பாக நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் திரண்டதால், அந்த இடமே போர்க்களமாக மாறியது. போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகளைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் சுமார் 600 டன் குப்பைகளைத் தரம் பிரிக்காமல் புறநகர்ப் பகுதிகளில் கொட்டுவதற்கு மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சின்னக்காளிபாளையத்தில் தற்காலிகமாகக் குப்பைகளைக் கொட்ட எடுக்கப்பட்ட முயற்சிக்கு எதிராக விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கிளர்ந்தெழுந்தனர். ஏற்கெனவே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அண்ணாமலை இதில் பங்கேற்றது அரசியல் ரீதியாக இந்த விவகாரத்தை ஒரு பெரிய விவாதப் பொருளாக மாற்றியுள்ளது. அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜகவினர் திருப்பூரின் பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்டு வருவதால் அங்குக் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 2026 தேர்தலுக்கான வியூகங்கள் தயார்! பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழகம் வருகை!!
இதையும் படிங்க: காந்தி பெயரை வைத்து அரசியல் பண்ணுறாங்க! – எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை பதிலடி