சென்னை மெட்ரோ ரயில், நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 54.1 கி.மீ நீளமுள்ள முதல் கட்ட திட்டம் ஏற்கனவே இயங்கி வருகிறது, மேலும் இரண்டாம் கட்ட திட்டம் (118.9 கி.மீ) 2025 முதல் 2028 வரை படிப்படியாக திறக்கப்பட உள்ளது. இந்த திட்டம் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட், லைட்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை மூன்று முக்கிய வழித்தடங்களை உள்ளடக்கியது, இதன் மொத்த செலவு 63,246 கோடி ரூபாயாகும். இதனால் சென்னையின் மெட்ரோ வலையமைப்பு 173 கி.மீ ஆக விரிவடையும்.

மெட்ரோவின் இரண்டாம் கட்டம் முடிந்தவுடன், அர்காட் ரோடு, காளியம்மன் கோயில் தெரு போன்ற பகுதிகளில் சாலைகள் விரிவாக்கப்பட்டு, போக்குவரத்து மேலும் சீராகும். மேலும், பிங்க் ஸ்குவாட், டிஜிட்டல் க்யூ.ஆர் டிக்கெட், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் ஆகியவை பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துகின்றன. சென்னை மெட்ரோ, நகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்து, நிலைத்தன்மையையும் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
இதையும் படிங்க: மெட்ரோ ரயில் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்பேடு மெட்ரோ ரயில் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்து இணைப்பை துண்டித்தார். இதனை அடுத்து, மெட்ரோ நிர்வாகம் உடனடியாக கோயம்பேடு காவல்துறையினருக்கு தகவல் அளித்தது.
மிரட்டல் தகவல் பரவியதைத் தொடர்ந்து, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். பயணிகளிடமும் கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. சுமார் ஒரு மணி நேர சோதனைக்குப் பிறகு, எவ்வித வெடிபொருட்களும் கண்டறியப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், பயணிகள் மத்தியில் ஏற்பட்ட பதற்றம் படிப்படியாக தணிந்தது.
இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் இந்த மிரட்டலை விடுத்தது தெரியவந்தது. அவனை காவல்துறையினர் கைது செய்து, மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மிரட்டலுக்கான காரணம் மற்றும் சிறுவனின் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்பும் சென்னையில் மெட்ரோ மற்றும் ரயில் நிலையங்களுக்கு இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன, ஆனால் பெரும்பாலும் அவை புரளிகளாகவே இருந்துள்ளன. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரித்துள்ளது. மெட்ரோ நிர்வாகம் பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, காவல்துறையுடன் இணைந்து தொடர்ந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அசத்தல் வசதிகளை கொண்டு வரும் சென்னை மெட்ரோ.. இப்போ புதுசு என்ன தெரியுமா..??