நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கல்லூரி வளாகத்தில் நேற்று இரத்ததான முகாம் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்துள்ளனர்.
இந்த முகாமில் பங்கேற்ற இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மேரா யுவ பாரத் அமைப்பைச் சேர்ந்த ஒருவர், இரத்ததானம் செய்ய வந்த மாணவர்களிடம் தனியாக ஒரு படிவத்தை வழங்கியுள்ளார்.
அந்தப் படிவத்தில் பெயர், வயது, பயிலும் படிப்பு, பட்டப்படிப்பு, சாதி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை.. தடை விதிக்க முடியாது..! வழக்கை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவு..!!
இதனை பார்த்த சில மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் பேசிய மாணவர் ஒருவர், “இரத்ததானம் செய்வதற்கும் சாதிக்கும் என்ன தொடர்பு? சாதி விவரங்களை ஏன் கேட்கிறார்கள்? சாதியை பார்த்துத்தான் இரத்தம் பெறுவார்களா? சாதி விவரங்களை தெரிவித்துதான் இரத்ததானம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், பல்வேறு தரப்பினரும் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், “ எந்தப் படிவத்தை வழங்கி சாதி உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டன என்பது தொடர்பாக கல்லூரி முதல்வர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”.
மேலும், அரசு மருத்துவமனையின் பதிவேட்டில் பதிவு செய்ததைத் தவிர, கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் எந்தவிதமான படிவத்தையும் பூர்த்தி செய்யவில்லை என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேரா யுவ பாரத் அமைப்பைச் சேர்ந்த ரஞ்சித் குமாரிடம் கேட்டபோது, இதே படிவம்தான் இந்தியா முழுவதும் வழங்கப்பட்டு வருவதாகவும், அதன்படி விவரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து திடீரென பிரச்சனை எழுந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உதகை பி1 காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உதகை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற இரத்ததான முகாமில், அனுமதியின்றி மாணவர்களின் சாதி தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு நீலகிரி மாவட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் ரியல் ஹீரோ சுமித் மச்சார் உடல்நிலை எப்படி இருக்கு? இந்திய தூதரகம் வெளியிட்ட அப்டேட்!