கரூர் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தமிழக வெற்றி கழகம் (தவெக) பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்புக் குழுவின் வருகையை முன்னிட்டு சிபிஐ டிஐஜி அதுல்குமார் தாக்கூர் இன்று கரூர் வந்துள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, ஐ.ஜிக்கள் சோனல் வி. மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் மேற்பார்வையில், சிபிஐ அதிகாரி பிரவீண்குமார் தலைமையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

அக்டோபர் 16ஆம் தேதி கரூர் வந்த சிபிஐ, மறுநாள் எஸ்ஐடி (சிறப்புப் புலனாய்வுக் குழு) ஆவணங்களைப் பெற்றுக் கொண்டது. கரூரில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், போலீசார், தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடத்தி, அவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அங்கு என்ன நடந்தது? கரூர் சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி விசாரணை...!
சிபிஐ விசாரணையின் அடுத்தகட்டமாக, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழு இன்று கரூர் வரவுள்ள நிலையில், சிபிஐ டிஐஜி அதுல்குமார் தாக்கூர் இன்று காலைக் கரூர் சிபிஐ அலுவலகத்துக்கு வருகை தந்தார்.
அவர், இந்த வழக்கில் சிபிஐ இதுவரை விசாரணை செய்த தரவுகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதிக்கு அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அப்போது சிபிஐ அதிகாரிகள் நடந்த சம்பவம் குறித்து டிஐஜிக்கு விளக்கமளித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றக் குழுவின் வருகை, விசாரணையின் வேகம் மற்றும் துல்லியம் ஆகியவற்றை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கரூர் சம்பவம் எதிரொலி… பனையூரில் முகாமிட்ட CBI அதிகாரிகள்..! நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…!