மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சமீபத்தில் வெயில் கொளுத்தும் கோடைக்காலத்தில் மக்களுக்கு ஒரு விசித்திரமான அறிவுரையை வழங்கினார். மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “பாக்கெட்டில் ஒரு வெங்காயத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எதுவும் ஆகாது” என்று கூறினார். இந்தப் பேச்சு விரைவில் வைரலாகி, சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
சிந்தியா தனது பேச்சில், தான் ஏர் கண்டிஷனரைப் பயன்படுத்துவதில்லை என்றும், அதிக வெப்பநிலையிலும் “சம்பல் தோல்” என்று தான் அழைக்கும் இயல்பான தாங்குதிறனால் வெப்பத்தைச் சமாளிப்பதாகவும் கூறினார். அவர் தொடர்ந்து, “நான் இளமையாகத் தெரிந்தாலும் என் ஆத்மா மிகவும் பழமையானது. பாக்கெட்டில் வெங்காயம் வைத்துக் கொள்ளுங்கள். எதுவும் ஆகாது. இன்றைய காலத்தில் எல்லோரும் மொபைல் போன் எடுத்துச் செல்கிறார்கள்.

நான் வெங்காயம் எடுத்துச் செல்கிறேன். இவை பழைய விஷயங்கள். ஆயுர்வேதம் முன்னேறும் போது இந்தப் பழைய விஷயங்களை மறக்கக் கூடாது” என்று பேசினார். மேலும், “ஜூன் மாதத்தின் கொளுத்தும் வெப்பத்தில் தலையைத் துணியால் மூடிக்கொள்ளுங்கள், பாக்கெட்டில் வெங்காயம் வைத்துக் கொள்ளுங்கள், கடவுளின் பெயரைச் சொல்லுங்கள்” என்றும் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: பியூஷ் கோயலுக்கு நாவடக்கம் தேவை! தமிழகத்தை விமர்சித்த மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!
விசித்திரமாக அட்வைஸ் கொடுத்த மத்திய அமைச்சர் சிந்தியாவின் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. சமூக ஊடகங்களில் “வெங்காயம் வைத்தால் தீய சக்தி அண்டாது” என்று கிண்டல் செய்யும் மீம்கள் பரவின. சிலர் இதை அறிவியலுக்கு எதிரான, மூடநம்பிக்கை சார்ந்த பேச்சு என்று அழைத்தனர்.
இதையும் படிங்க: மலர் கண்காட்சிக்கு ரெடியாகும் அரசு தாவரவியல் பூங்கா..!! பூக்களால் நிரம்பி வழியப்போகும் ஊட்டி..!!