பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பசுமைப் பரப்பை விரிவுபடுத்தும் நோக்கில், பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, குறுங்காடுகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொது இடங்களில் உள்ள மரங்களையோ, அவற்றின் கிளைகளையோ அனுமதியின்றி வெட்டுவோருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

முன்பு, மரங்களின் கிளைகளை அகற்றுதல், காய்ந்த மரங்களை நீக்குதல், மாற்று இடங்களில் மரங்கள் நடுதல் போன்ற சேவைகளுக்கு அரசு அல்லது தனியார் தரப்பினரின் விண்ணப்பங்கள் வனத்துறை வழியாகப் பெறப்பட்டு, மாவட்ட பசுமைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது காலதாமதத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: “விடிய விடிய போராட்டம்; குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்!” - ரிப்பன் மாளிகை முன் தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை!
இதனைத் தவிர்க்கும் வகையில், மாநகராட்சி ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் ஜனவரி 12 முதல், அனைத்து விண்ணப்பங்களும் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennaicorporation.gov.in/gcc/ அல்லது 'நம்ம சென்னை' மொபைல் செயலி மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். வனத்துறை வழியாக நேரடி விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. இந்த மாற்றம், பொதுமக்களுக்கு சேவையை எளிமையாக்கி, துரிதமாக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விண்ணப்பதாரர்கள், மாநகராட்சி இணையதளத்தில் உள்ள பசுமைக் குழு போர்ட்டலில் தங்கள் கோரிக்கையை பதிவு செய்யலாம். பெறப்பட்ட விண்ணப்பங்கள், மாநகராட்சியின் பூங்கா கண்காணிப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளால் கள ஆய்வு செய்யப்படும். ஆய்வறிக்கை பசுமை குழுவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு முடிவெடுக்கப்படும்.
குழுவின் நடவடிக்கை விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி (SMS) வழியாகவும், இணையதளம் வழியாகவும் தெரிவிக்கப்படும். அனுமதியின்றி பொது இடங்களில் மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மரக்கிளைகளை வெட்டுதல், மரங்களில் ஆணிகள் அடித்து விளம்பரப் பலகைகள் பொருத்துதல், விளக்குகள் கட்டுதல் போன்ற செயல்களுக்கு ரூ.15,000 அபராதம் உண்டு.

இத்தகைய அத்துமீறல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. பொதுமக்கள், மரங்கள் தொடர்பான சேவைகளுக்கு இணையதளம் அல்லது செயலி வழியாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த முயற்சி, சென்னையின் பசுமை அம்சத்தை பாதுகாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கருணையே இல்லையா?.. கைகளில் சாக்கடையை அள்ளி தூய்மை பணியாளர்கள் போராட்டம்...!