சென்னை எக்மோர் - விழுப்புரம் ரயில்வே பிரிவில் நடைபெற்று வரும் அத்தியாவசியப் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரும் வார இறுதியில் மெமு (MEMU) ரயில் சேவைகளில் அதிரடி மாற்றங்களைச் சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 'லைன் பிளாக்' மற்றும் 'பவர் பிளாக்' முறையின் கீழ் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஒலக்கூர் யார்டு பகுதியில் வரும் டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மதியம் 12:40 மணி முதல் மாலை 16:10 மணி வரை, சுமார் 3 மணி நேரம் 30 நிமிடங்கள் இந்தப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, தாம்பரம் மற்றும் விழுப்புரத்திலிருந்து இயக்கப்படும் முக்கிய மெமு ரயில்கள் குறிப்பிட்ட இலக்குகளுக்கு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி எலுமலை தெரிவித்துள்ளார்.
இதன்படி, தாம்பரத்திலிருந்து காலை 09:45 மணிக்குப் புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் (வண்டி எண்: 66045), தொழுப்பேடு மற்றும் விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, விழுப்புரத்திலிருந்து மதியம் 13:40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - சென்னை கடற்கரை மெமு ரயில் (வண்டி எண்: 66046), விழுப்புரம் மற்றும் தொழுப்பேடு இடையே ரத்து செய்யப்பட்டு, அந்த ரயில் தொழுப்பேட்டில் இருந்தே தனது பயணத்தைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பராமரிப்புப் பணி காரணமாக வார இறுதி நாட்களில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள், ரயில் நேர மாற்றங்களைக் கவனித்துத் தங்களது பயணத்தைச் சீராக அமைத்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிர்ச்சியூட்டும் உன்னாவ் பாலியல் வழக்கு… நிறுத்திவைக்கப்பட்ட தண்டனை… சுப்ரீம் கோர்டை நாடிய பாதிக்கப்பட்ட பெண்…!
இதையும் படிங்க: வரைவு வாக்காளர் பட்டியல்... பெயர் சேர்க்க 1.65 லட்சம் பேர் விண்ணப்பம்... தேர்தல் ஆணையம் தகவல்...!