பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பர் மாளிகை அருகே போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி தோல்வியைத் தழுவிய நிலையில், நேற்று அனுமதி இல்லாத இடத்தில் போராட்டம் நடத்தும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் ரிப்பன் மாளிகை முன்பு குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். வாகனங்களில் ஏற மறுத்த துப்புரவு பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தர, தரவென இழுத்துச் சென்றனர். இதனால் சில பெண் துப்புரவு பணியாளர்கள் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.
முழக்கமிட்டபடி இருந்த போராட்டக்காரர்களை 13 பேருந்துகளில் ஏற்றி நீலாங்கரை, வேளச்சேரி, மவுண்ட் ரோடு, கோட்டூர்புரம் போன்ற நகரின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமூக மையங்களுக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர். நள்ளிரவுக்குள் சுமார் 90 சதவீத போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். சில நிமிடங்களில், தனியார் துப்புரவுப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை வெளியே இருந்த குப்பைகள், செருப்புகள், கொடிகள் போன்றவற்றை அப்புறப்படுத்தினர்.
இதையும் படிங்க: தொடர் போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள்.. இன்று நடந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி..!!
தற்போது சமூக நலக்கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களிடம், “மீண்டும் ரிப்பன் பில்டிங் முன்பு போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என உறுதி அளித்தால் மட்டுமே வெளியே விடுவோம்” என காவல்துறையினர் மிரட்டல் விடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ரிப்பன் பில்டிங் முன்பு தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்திய கூடாரங்களை அப்புறப்படுத்திய போலீசார், ரிப்பன் மாளிகை முழுவதையும் சுத்தி வேலி அமைத்து யாரும் போராட்டத்தில் ஈடுபட முடியாத அளவிற்கு தடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து 11வது நாளாக போராட்டம்.. தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்தார் தவெக தலைவர் விஜய்..!!