சென்னை மாநகரில் ஒரு காலத்தில் பிரபலமாக இயக்கப்பட்ட டபுள் டக்கர் (இரட்டை அடுக்கு) பேருந்துகள் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC) இந்த ஆண்டு இறுதிக்குள் மின்சார இயக்க டபுள் டக்கர் பேருந்துகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி, தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ், காற்று மாசுபாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதல் கட்டமாக 20 மின்சார டபுள் டக்கர் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் இயக்கப்பட உள்ளன. இதற்கான சோதனை ஓட்டமும் நடைபெற்று வருகிறது. தற்போது வரப்போகும் டபுள் டக்கர் பேருந்துகள் முழுமையான ஏசி பஸ்களாக இயங்கும் என எதர்பார்க்கப்படுகிறது. 1970-களில் முதன்முதலில் அறிமுகமான இந்த பேருந்துகள், 1980-ல் நிறுத்தப்பட்டு, பின்னர் 1997-ல் மீண்டும் இயக்கப்பட்டன. ஆனால், 2008-ல் மேம்பாலப் பணிகள் மற்றும் குறுகிய சாலைகள் காரணமாக சேவை நிறுத்தப்பட்டது.

தற்போது, சென்னையின் பாரம்பரிய வழித்தடங்களான அண்ணா சாலை, காமராஜர் சாலை, மாமல்லபுரம் ஆகியவற்றில் இந்த பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், வார நாட்களில் பரபரப்பான பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பேருந்துகள் இயங்கும் போது 18ஏ என்ற தடத்தில் இயங்கி வந்தது.
இதையும் படிங்க: நீரை சேமிச்சு வெச்சுக்கோங்க மக்களே..!! சென்னையில் 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!!
இந்தப் பேருந்துகள் தாழ்தள வசதி மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுடன் இயக்கப்பட உள்ளன, இதனால் பயணிகளுக்கு வசதியான மற்றும் சுவாரஸ்யமான அனுபவம் கிடைக்கும். இதற்காக 625 புதிய மின்சார பேருந்துகளை வாங்கவும் MTC முடிவு செய்துள்ளது. இந்த முயற்சி, சென்னையின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதோடு, நகரின் பழைய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஃபைன் தானே.. அசால்ட்டாக விடும் வாகன ஓட்டிகள்.. இப்போ ரூ.450 கோடி நிலுவையாம்..!!