நிதி ஆயோக் அமைப்பின் 10வது கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. கடந்தாண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளாத நிலையில், இந்த ஆண்டு கலந்துகொண்டார். முன்னதாக, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர்களுடன் பிரதமர் மோடி குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார். இதில், முதல் வரிசையில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு அடுத்ததாக முதல்வர் ஸ்டாலின் இடம் பிடித்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் கையைப் பிடித்து சிரித்துப் பேசினார். இடைவேளையின் போது தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட முதல்வர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடியை சந்தித்து பேச முதல்வர் ஸ்டாலின் நேரம் கேட்டு இருந்தார். பிரதமர் மோடி அனுமதி அளித்த நிலையில் மாலை 4.30 மணி அளவில் சந்திப்பு நடந்தது.அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் வலியுறுத்திய கோரிக்கைகள் குறித்து விவரித்தார். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாகவும், செங்கல்பட்டு - திண்டிவனம் சாலையை 8 வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர்தல் நேரத்தில் இப்படியா? இளம்பெண்களை இரையாக்க நினைத்த நிர்வாகி.. சாட்டையை சுழற்றிய உதயநிதி..!

மேலும், நிலுவையில் உள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். முன்னதாக வெள்ளைக்கொடியுடன் டெல்லி சென்றிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், என்னிடம் வெள்ளைக்கொடியும் இல்லை; எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளதைப் போன்ற காவிக்கொடியும் இல்லை என்று கூறினார்.
இந்த நிலையில் அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நிடி ஆயோக் கூட்டத்திற்கு பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டில்லி சென்றார்' என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது; மூன்று ஆண்டுகளாக நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின் தற்போது பங்கேற்றது ஏன்? பிரதமர் மோடி தலைமையில் 3 ஆண்டுகளாக நடந்த நிடி ஆயோக் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை? மக்கள் பிரச்னைகளுக்கு செல்லாமல் இப்போது ஏன் சென்றார். அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நிடி ஆயோக் கூட்டத்திற்கு பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்றார்.
முதல்வர் ஸ்டாலின் கடமை தவறிவிட்டார். மக்கள் நலனின் அக்கறை இருந்திருந்தால் மூன்று ஆண்டுகள் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்காமல் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று இருப்பார். தமிழகத்தில் பல்வேறு துறையில் ஊழல் நடக்கிறது.

எதிர்க்கட்சியாக இருந்த போது மோடி வந்தால் ஸ்டாலின் கருப்பு பலூன் பறக்க விட்டார். எதிர்க்கட்சியாக இருந்தபோது கருப்புக்கொடி காட்டிய தி.மு.க., இப்போது வெள்ளைக் கொடி காட்டுகிறது? தி.மு.க., நிர்வாகி மீது பெண் கொடுத்த பாலியல் புகாரில் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., நிர்வாகி மீது பெண் கொடுத்த புகார் என்ன ஆனது?

உதயநிதி ஸ்டாலின் சொன்னதை போல் EDக்கும் பயமில்லை, மோடிக்கும் பயமில்லை என்றால், அந்த தம்பி எதற்காக வெளிநாட்டிற்கு ஓடினார்? தமிழ்நாட்டில் இருந்திருந்தால், பயமில்லை என்று சொல்லிக் கொள்ளலாம். விரைவில் வெளிநாட்டிற்கு சென்றவர்கள் தொடர்பாக வெளியில் வரும். இதுதான் ஆரம்பம்.. விரைவில் யார் எப்படி பயப்படுவார்கள் என்பது தெரியும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி கைக்குச் சென்ற முக்கிய கடிதம்... வசமாக சிக்கிய செல்லூர் ராஜூ!