இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party - CJP) நாளை (அக்டோபர் 10) டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தைத் தடுக்கும் நோக்கில், மத்திய ரயில்வே துறை டெல்லிக்கு வரும் பல ரயில்களை ரத்து செய்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையான ‘எஸ்.ஐ.ஆர்’ (Special Intensive Revision) தொடர்பாக ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்று ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சி வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே மும்பை மற்றும் பெங்களூரில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கட்சி ஆதரவாளர்கள் டெல்லி நோக்கி புறப்பட்டு வருகின்றனர்.
போராட்டத்திற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. மத்திய அரசும் டெல்லி அரசும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நாளை அதிகாலை 4 மணி முதல் மதியம் 2 மணி வரை புதுடெல்லி மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கு வரும் அனைத்து மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அக்.10..!! இது ஒரு நீண்ட போராட்டமாக இருக்கும்!! டெல்லி போலீசுக்கு சவால்விட்ட கரப்பான்பூச்சி கட்சி..!!
இன்று மதியம் 2 மணிக்குப் பிறகு புறப்பட்டு நாளை அந்த நேரத்தில் அடையும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் இருந்து இன்று புறப்படவிருந்த ஹவுரா-நியூ டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (12301) மற்றும் செல்டா-புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (12313) ஆகிய இரண்டு ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், மத்திய டெல்லியில் எதிர்பார்க்கப்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் பல கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், இது ஜனநாயக உரிமைகளைப் பாதிக்கிறது என்றும் எதிர்க்கட்சிகளும் இளைஞர் அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன.
தேர்தல் ஆணையத்திற்குள் கூட இரண்டு ஆணையர்கள் பலமுறை ஆட்சேபனை தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, இந்தப் போராட்டத்தைத் தடுக்கும் நோக்கில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
பாரதிய கிஷான் யூனியன் உள்ளிட்ட சில விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் உள்ளன. டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளை ஜந்தர் மந்தர் பகுதியில் பதற்றம் நிலவ வாய்ப்புள்ளது. பயணிகள் தங்கள் ரயில் நிலையை உடனடியாகச் சரிபார்த்துக்கொள்ள ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி நாளை முதல் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி!